Asianet News TamilAsianet News Tamil

வியாபார போட்டியால் நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு.. மோடியை மோசமாக விமர்சித்த கே.எஸ்.அழகிரி..!

மத்திய அரசின் தவறான தடுப்பூசிக் கொள்கைதான் காரணம். கொரோனா தொற்றின் காரணமாக நாள்தோறும் மக்கள் மடிந்துகொண்டிருக்கிறார்கள். பீதியோடு எந்த நேரமும் கொரோனா தொற்று நம்மை பாதிக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

Vaccine shortage across the country due to business competition... Modi government attack in ks alagiri
Author
Tamil Nadu, First Published May 25, 2021, 3:59 PM IST

உயிருக்குப் போராடுகிற மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மோடி அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்தப் பொறுப்பைத் தட்டிக்கழித்து மாநிலங்கள் தலையில் சுமத்துவாரேயானால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் முதல் தொற்று கண்டறியப்பட்டு முதல் அலையின் காரணமாகக் கடுமையான பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளானார்கள். முன்னறிவிப்பின்றி பொது ஊரடங்கு அறிவித்ததால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதாரப் பேரழிவை நாடு சந்தித்தது. முதல் அலையில் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளையும், தடுப்பூசி தயாரிப்பு குறித்தும், அடுத்துவரும் இரண்டாவது அலையை எதிர்கொள்கிற வகையில் தொலைநோக்குப் பார்வையோடு எந்த செயல் திட்டத்தையும் பிரதமர் மோடி முன்வைக்கவில்லை.

Vaccine shortage across the country due to business competition... Modi government attack in ks alagiri

கடந்த காலங்களில் தடுப்பூசி உற்பத்தியை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்தான் செய்து வந்தன. தடுப்பூசி உற்பத்தி செய்கிற பொறுப்பை பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்காமல் சீரம், பயோடெக் என்ற தனியார் நிறுவனங்களின் உற்பத்தியை நம்பியிருக்கிற அவலநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி மத்திய அரசு புதிய தடுப்பூசிக் கொள்கையை அறிவித்தது. இதன் மூலம் தடுப்பூசி போடுகிற பொறுப்பை மாநில அரசுகள் மீது மத்திய அரசு சுமத்தியது. இரண்டு தனியார் நிறுவனங்களின் உற்பத்தியில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், மீதி 50 சதவீதம் மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்றுக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் 29 மாநில அரசுகளும் மற்றும் தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசிக்காக இரண்டு தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதில், மத்திய அரசு எந்த விதமான கொள்கையையும் வகுக்கவில்லை. இரண்டு தனியார் நிறுவனங்கள் என்ன விரும்புகிறதோ, யார் விலை அதிகமாகக் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் தடுப்பூசி வழங்குகிற வியாபாரப் போட்டி உருவானது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துவிட்டது. நாள்தோறும் பாதிப்புகள் 4 லட்சத்தை எட்டியுள்ளன. நாள்தோறும் பலி எண்ணிக்கை நாலாயிரத்தைத் தாண்டி வருகிறது. பலி எண்ணிக்கையில் உலக நாடுகளில் மூன்றாவது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் சிக்கியுள்ள மக்களுக்கு ஒரே பாதுகாப்பு தடுப்பூசிதான். இதுவரை மத்திய அரசு 21 கோடி தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது.

Vaccine shortage across the country due to business competition... Modi government attack in ks alagiri

இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 22.4 சதவீதத்தினருக்குத்தான் ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்க முடியும். இதுவரை 4.5 சதவீதத்தினருக்குத்தான் இரண்டு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடுகிற எண்ணிக்கையும் கடுமையாகக் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ஏறத்தாழ 30 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால், மே மாதத்தில் இதுவரை நாளொன்றுக்கு சராசரியாக 18 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் மே மாதத்தில் 5 கோடி பேருக்குதான் தடுப்பூசி போடமுடியும்.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 135 கோடி. இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 94 கோடி. இவர்களுக்கு மொத்த தடுப்பூசி தேவை 188 கோடி. தற்போது ஒரு மாதத்திற்கு கோவிஷீல்டு தடுப்பூசி 6 கோடியும், கோவாக்சின் 2 கோடியும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மாதம் ஒன்றுக்கு 8 கோடி தடுப்பூசிகள் உற்பத்தியாவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மே மாதத்தில் தடுப்பூசி போடுகிற எண்ணிக்கையின் படி மொத்தம் 5 கோடி தடுப்பூசிதான் போட முடியும். மீதி 3 கோடி தடுப்பூசிகள் எங்கே மாயமாய் மறைந்தன என்று தெரியவில்லை. இன்றைய நிலையில் தடுப்பூசி போடத் தொடங்கிய 115 நாளில் 19 கோடி டோஸ் தடுப்பூசி இதுவரை போடப்பட்டுள்ளது.

Vaccine shortage across the country due to business competition... Modi government attack in ks alagiri

தற்போது ஆண்டொன்றுக்கு 54 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்கிற நிலையில், மொத்தம் தடுப்பூசி எண்ணிக்கையான 188 கோடி டோஸ் போடக் குறைந்தபட்சம் மூன்றரை ஆண்டுகள் தேவைப்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. தமிழ்நாட்டிற்குத் தேவையான தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இதை உறுதிப்படுத்துகிற வகையில் 6.37 கோடி மக்கள்தொகை கொண்ட குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு மொத்த தடுப்பூசி விநியோகத்தில் 16.4 சதவீதம் வழங்கியிருக்கிறது.

ஆனால் 8.3 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு வெறும் 6.4 சதவீதம்தான் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பிரதமர் மோடியின் அப்பட்டமான, பாரபட்சமான அணுகுமுறை வெளிப்பட்டிருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டிற்கு 77 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு 70 லட்சம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுகிற திட்டத்தை நிறைவேற்றத் தமிழக முதல்வர் உலகளாவிய டெண்டர் மூலம் கொள்முதல் செய்யத் தீவிரம் காட்டியிருக்கிறார்.

Vaccine shortage across the country due to business competition... Modi government attack in ks alagiri

ஆனால், பஞ்சாப், டெல்லி மாநிலங்கள் மேற்கொண்ட முயற்சியில் தடுப்பூசிகளை மத்திய அரசுக்குதான் விற்பனை செய்ய முடியுமே தவிர மாநிலங்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடியாது என்று தடுப்பூசி உற்பத்தி செய்கிற மாடர்னா - பைசர் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது மாநிலங்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டிலும் உற்பத்தியில் பற்றாக்குறை. வெளிநாட்டிலும் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தவறான தடுப்பூசிக் கொள்கைதான் காரணம். கொரோனா தொற்றின் காரணமாக நாள்தோறும் மக்கள் மடிந்துகொண்டிருக்கிறார்கள். பீதியோடு எந்த நேரமும் கொரோனா தொற்று நம்மை பாதிக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். உயிரின் மீது நம்பிக்கையையும் இழந்து வருகிறார்கள். இது மக்களின் மனநிலையைக் கடுமையாக பாதித்திருக்கிறது.

Vaccine shortage across the country due to business competition... Modi government attack in ks alagiri

இத்தகைய கொடுமையான நிலையில் இருந்து மக்களை மீட்கவும், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுகிற புதிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும். அனைத்து மாநிலங்கள் மூலமாக 188 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு ரூ.75 ஆயிரம் கோடிதான் தேவைப்படும். ஏற்கெனவே பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி ரூ.40 ஆயிரம் கோடியை உடனடியாக ஒதுக்கி உயிருக்குப் போராடுகிற மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மோடி அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்தப் பொறுப்பைத் தட்டிக்கழித்து மாநிலங்கள் தலையில் சுமத்துவாரேயானால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios