தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவருடைய வங்கிக் கணக்கு தற்போது வரை செயல்பட்டு வருவது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.  

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016, டிசம்பர் 5 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம், நினைவில்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

 

இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை பதில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அதில்,‘ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு உள்பட அவருக்கு சொந்தமான நான்கு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ரூ. 16 கோடியை செலுத்தினால் முடக்கப்பட்ட சொத்துகளை மீட்கலாம்” என வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் அவருக்கு சொந்தமான வணிக வளாகம், வீட்டு வாடகை, கோடநாடு எஸ்டேட் மூலம் கிடைக்கும் பணம் வாடகையாகச் செலுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்துகள் விவரம், வருமான விவரம் ஆகியவற்றை வேட்புமனுவில் குறிப்பிடுவது வழக்கம். 

ஆனால், 2011, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வருமான வரி நிலைவைத் தொகை குறித்த எந்தத் தகவல்களையும் தனது வேட்புமனுக்களில் தெரிவிக்கவில்லை. பொதுவாக ஒருவர் மறைந்தவுடனே சட்டப்பூர்வ வாரிசுகள் இறப்புச் சான்றிதழை வங்கியில் தாக்கல் செய்து அவரது வங்கிக் கணக்கை முடித்து விடுவார்கள். ஜெயலலிதா மறைந்த அடுத்த நாளே, சென்னை மாநகராட்சி அவரது இறப்புச் சான்றிதழை வெளியிட்டதும் நினைவுகூறத்தக்கது.