Asianet News TamilAsianet News Tamil

காவிரி விவகாரம் தொடர்பான வரைவு செயல் திட்டம்.. கூடுதல் அவகாசம் கேட்கிறது மத்திய அரசு!! உச்சநீதிமன்றம் ஏற்குமா? கண்டிக்குமா?

union government seeks extra time period to submit cauvery draft
union government seeks extra time period to submit cauvery draft
Author
First Published Apr 27, 2018, 11:48 AM IST


காவிரி விவகாரம் தொடர்பான வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்திடம் கூடுதலாக 2 வார கால அவகாசத்தை மத்திய அரசு கோரியுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு மார்ச் 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதேநேரத்தில், உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை கடந்த 9ம் தேதி ஒன்றாக விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதையே ஸ்கீம் என்று குறிப்பிட்டோம். இதுதொடர்பான வரைவு செயல்திட்டத்தை தயார்படுத்தி மத்திய அரசு மே 3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். செயல் திட்டத்தை உருவாக்குவதில் இருந்து மத்திய அரசு தப்பிக்க முடியாது. நீதிமன்றம் உத்தரவிட்டது மத்திய அரசுக்குத்தான் என்பதால், எந்த மாநிலத்துடனும் கலந்தாலோசிக்க தேவையில்லை. காவிரி விவகாரம் தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மே 3ம் தேதிக்கு உத்தரவிட்டது.

மே 3ம் தேதி நெருங்கிவிட்ட நிலையில், வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய கூடுதலாக 2 வார காலம் அவகாசம் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. மே 12ம் தேதி கர்நாடக தேர்தல் உள்ள நிலையில், அதற்காகவே மத்திய அரசு கால அவகாசம் கோரியுள்ளது என்பது அப்பட்டமாக தெரிகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios