இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதுவரை 645 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற, மருத்துவர்களும் செவிலியர்களும் இரவு பகல் பாராமல் சுயநலமின்றி, தங்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றிவருகின்றனர். 

ஆனால் அப்படி தியாகவுள்ளமும் அர்ப்பணிப்புணர்வும் கொண்ட மருத்துவர்கள் தேசியளவில் பல இடங்களில் சரியான முறையில் நடத்தப்படுவதில்லை. சென்னையில் உச்சபட்சமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவரின் உடலை அடக்கம் செய்யக்கூட, மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. 

உலகளவில் பேரழிவை ஏற்படுத்திவரும் பெருந்தொற்றிலிருந்து நாட்டு மக்களை காக்க சுயநலமில்லாமல் போராடும் மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவ பணியாளர்களும் போற்றப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் ஆங்காங்கே நடந்துகொண்டே இருக்கின்றன. 

இதையடுத்து கொரோனாவுக்கு எதிரான போரில் அர்ப்பணிப்புடன் தன்னலமில்லாமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகிய முன்கள பணியாளர்களை காக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. 

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் குற்றவியல் தண்டனை சட்டப்படி, ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் வகையில் அவசர  சட்டம் இயற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றவுடன், இந்த அவசர சட்டம் நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகிய முன்கள பணியாளர்களை காக்க மத்திய அரசு இயற்றியுள்ள அவசர சட்டம் நாட்டு மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நாட்டை காப்பாற்ற முன்நின்று போராடும் அவர்களை காப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.