65 ஆண்டுகளாக இயங்கிவந்த யூஜிசி என்ற பல்கலைக்ழக மானியக் குழு கலைக்கப்பட்டு தேசிய உயர் கல்வி ஆணையம் எனப்படும் புதிய அமைப்பு உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உயர் கல்வியை ஒழுங்குபடுத்தும் மிகப்பெரிய  அமைப்பாக யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு செயல்பட்டு வருகிறது. 1953-ம் ஆண்டு முதல் இது நடைமுறையில் உள்ளது.

கல்விசார்ந்த பிரச்சனைகள்  மட்டுமின்றி, தகுதியுள்ள கல்லூரிகளுக்கு யு.ஜி.சி. நிதி உதவி வழங்கி வருகிறது. மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் டெல்லியிலும், புனே, போபால், ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூரு, கவுகாத்தி போன்ற நகரங்களில் கிளை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய கல்வித்திறத்தை உயர்த்தவும், கல்வி  மீது முழுக்கவனம் செலுத்த முடியாததால், பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக, தேசிய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

இது குறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேஹர் தனது டுவிட்டர் பக்கத்தில் , வரலாற்றுச்சிறப்பு மிக்க முடிவு எடுத்திருக்கிறோம். யுஜிசி அமைப்பை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி ஆணையம் கொண்டு வருகிறோம். அதற்கான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலும், கல்வித்துறையை மேம்படுத்தி, மாணவர்களின் திறனைமேம்படுத்தும் வகையில் மாற்றப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அது தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கல்வியாளர்கள், பொதுமக்கள் ஜூலை 7-ந் தேதி மாலை 5 மணிவரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு, கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தும். மானிய விவகாரங்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கவனித்துக் கொள்ளும் என  பிரகாஷ் ஜவடேஹர் குறிப்பிட்டுள்ளார்.