நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல், மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. கொரோனா இன்னும் குறையாத காரணத்தால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை. பல்வேறு தளர்வுகளுடன் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக கல்லூரி திறக்கப்படாததால் நாடு முழுவதும் ஆன்லைன் வழி கல்விமுறையே பின்பற்றப்படுகிறது. 

இந்நிலையில்,  பிற ஆண்டுகளுக்கு தற்போது ஆன்லைனில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருவதால், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடங்கள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. 

இந்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும்  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். அதில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்படி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்த  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.