மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் வந்து விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்ததற்கு, "தான் தொண்டர்கள் வரிசையில் கடைசியாக" இருப்பதாக உதயநிதி தெரிவித்துள்ளார். திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம், செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெற்றது. தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புகைப்படங்கள் கொண்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. 

 இந்த பேனரைப் பார்த்த திமுக தொண்டர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிஸ்டர் உதயநிதி, ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பாக இருக்கு தெரியுமா? உங்களுக்குத் தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடையில, உங்கள் போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்திருந்த உதயநிதி ஸ்டாலின், தவறு... மீண்டும் நடக்காது என்று உறுதி அளித்திருந்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். 

 இந்த நிலையில், கோவையில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், தொண்டர்கள் வரிசையில் நான் கடைசியாக நிற்பதாக கூறியுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி வந்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு, உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார். கோவை மாவட்டம், பனப்பட்டி கிராமத்தில், திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மு.கண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய உதயநிதி, திமுக என்றாலே போராட்டம் தான்; நீதிமன்றம் வரை சென்று போராடித்தான் இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்கி இருக்கிறோம். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக அமைச்சர்கள் அனைவரும் சிறை செல்வார்கள். தொண்டர்கள் வரிசையில் நான் கடைசியாக நிற்கிறேன் என்று கூறினார்.