கருணாநிதி மறைவை அடுத்து அவர் எம்.எல்.ஏவாக இருந்த திருவாரூர் சட்டமன்ற  தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்த நிலையில் திமுக நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தியது. திருவாரூர் தொகுதியில் திமுக சார்பாக யாரை நிற்க வைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் தேர்தலில் திமுக சார்பாக பூண்டி கலைவாணன்தான் போட்டியிடுவார் என்று தகவல்கள் வருகிறது. திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராக இருக்கிறார் பூண்டி கலைவாணன். திருவாரூரில் அதிக பிரபலமான இவர் அங்கு நிறுத்தப்பட்டால் வெற்றிபெறுவார் என்று சொல்லப்பட்டது.  அதேசமயம் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வந்தது. கருணாநிதியின் இடத்தில் தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்று கூறப்பட்டது. 

அதுமட்டுமல்ல, பொதுவாக தாத்தாவின் சொத்து பேரனுக்கு என்று சொல்வார்கள். அதே போல கருணாநிதி எம்.எல்.ஏவாக இருந்த  திருவாரூர் தொகுதியை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்போவதாக தெரிவித்திருக்கின்றனர் திமுகவை சேர்ந்த சிலர் ஏற்கனவே காய் நகர்த்தி வந்தனர். உதயநிதியை திருவாரூரில் போட்டியிட வைக்கும் முயற்சியில் அவரது ரசிகர்களும், திமுகவினருக்கு  சமீபகாலமாக நடைபெறும் அனைத்து கட்சி நிகழ்வுகளிலும் உதயநிதி பங்கேற்றார். 

எப்படியும் உதயநிதி போட்டியிடுவார் என நம்பிக்கையில் காத்திருந்த ரசிகர்களுக்கு, நேற்று சென்னையில் நடந்த ஆலோசனைக்கு கூட்டத்திற்குப் பின் பேட்டியளித்த ஸ்டாலின் ஷாக் கொடுக்கும் செய்தியை கூறியுள்ளார், தேர்தலில் நான் நிற்பேனா, துரைமுருகன் நிற்பாரா இல்லையென்றால் அண்ணன் டி.ஆர் பாலு நிற்பாரா என்று விரைவில் தெரியும், என்று கூறினார். மூன்று பேரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு சொன்ன ஸ்டாலின் உதயநிதியின் பெயரை மட்டும் சொல்லவே இல்லை.

இப்படி இருக்கையில், இன்று திருவாரூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப மனு அளித்துவரும் நிலையில், உதயநிதியை அந்த தொகுதியில் போட்டியிட வைக்க அவரது ரசிகர்கள் விண்ணப்பமனு கொடுத்துள்ளனர். 4ம் தேதியான நாளை திமுக வேட்பாளர் பெயர் இறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.