கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே திமுகவுடன் கூட்டணி அமைக்க கமல் முன் வந்த நிலையில் ஒரே ஒரு சீட் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறியதால் மக்கள் நீதி மய்யம் தனியாக போட்டியிட்டது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை கமல் கட்சியை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கமலின் ரேஞ்சே வேறு மாதிரி ஆகிவிட்டது. தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், ஒட்டு மொத்தமாக 16 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. குறிப்பாக நகரப்பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுக்கு ஆதரவு அமோகமாக இருந்தது. அதாவது சுமார் 3.63 சதவீத வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்று இருந்தது.

இதனால் சட்டப்பேரவை தேர்தலில் கமல் கட்சி மீது ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதோடு தேர்தலே அறிவிக்கப்படாத நிலையில் முதல் ஆளாக கமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தென் மாவட்டங்களில் கமல் செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல கூட்டம் சேர்கிறது. மேலும் கமலுக்கு ஊடகங்களிலும் நல்ல வெளிச்சம் கிடைக்கிறது. ஊடக வெளிச்சத்திற்கு தேவைப்படும் ரஜினி, எம்ஜிஆர் போன்றோரை கமல் கச்சிதமாக பயன்படுத்தி வருகிறார். இதே போல் விரைவில் ரஜினியும் கட்சி ஆரம்பிக்க உள்ளார்.

கமலுக்கே வரவேற்பு அதிகமாக உள்ள நிலையில் ரஜினிக்கு இதை விட அதிமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ரஜினி – கமல் இணைந்து செயல்பட்டால் வரவேற்பு பன்மடங்கு அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் கமல் – ரஜினி கூட்டணி அமைத்தால் மேலும் சில கட்சிகள், அமைப்புகள் கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது. எனவே ரஜினி தலைமையில் புதிய அணி உருவானால் அது அடுத்த ஆட்சி கனவில் இருக்கும் திமுகவிற்கு எதிராகவே இருக்கும். மேலும் ரஜினி தலைமையிலான அணி பிரிக்கும் வாக்குகள் பெரும்பாலும் அரசுக்கு எதிரான மற்றும் நடுநிலை வாக்குகளாகவே இருக்கும்.

இது இயல்பாக எதிர்கட்சியான திமுகவிற்கு செல்ல வேண்டிய வாக்குகள் ஆகும். ஆனால் இந்த எதிர்ப்பு வாக்குகள் சிதறும் போது ஆளும் கட்சியான அதிமுகவிற்கு சாதகமான நிலை உருவாகக்கூடும். கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி அமைத்து எதிர்ப்பு வாக்குகளை வைகோ, விஜயகாந்த் பிரித்தனர். இதனால் தான் ஜெயலலிதா வாக்கு வங்கி அடிப்படையில் மீண்டும் முதலமைச்சராக முடிந்தது. தற்போதும் அதே போன்றதொரு நிகழ்வை திமுக விரும்பவில்லை. மேலும் ரஜினி தலைமையில் வலுவான கூட்டணி அமையக்கூடாது என்று திமுக நினைக்கிறது.

இதற்கான முதல் படியாகவே ரஜினியுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்து வரும் கமலை வளைத்துப்போட திமுக முடிவு செய்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக – அதிமுக இடையே தான் தேர்தல் களத்தில் நேரடி போட்டி உள்ளது. இந்த இரண்டு கட்சிகளை மீறி வேறு ஒரு கட்சி வெற்றி பெற வாய்ப்பு குறைவு. புதிதாக உருவாகும் கட்சிகள் வாக்குகளை வேண்டுமானால் பிரிக்கலாம் ஆனால் வெற்றி – தோல்வி என்பது அதிமுக – திமுக வேட்பாளர்களாவே இருப்பார்கள். எனவே ரஜினி தலைமயிலான கூட்டணிக்கு சென்றால் வெற்றி உறுதி இல்லை. ஆனால் திமுக கூட்டணியில் வெற்றி உறுதி என்று கமலுக்கு ஆசை காட்டப்படுகிறது.

மேலும் புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்தால் அதிமுகவை எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என்று திமுக நினைக்கிறது. எனவே தான் கமலை திமுக கூட்டணிக்கு கொண்டு வர திமுக காய் நகர்த்தி வருகிறது. திரையுலகில உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, கமல் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் நன்கு அறிமுகம் ஆனவர். இந்த அறிமுகத்தின் அடிப்படையில் உதயநிதி மகேந்திரன் மூலமாக கமலை இரண்டு முறை சந்தித்து பேசியதாக சொல்கிறார்கள். ஒரு முறை மகேந்திரன் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது 40 தொகுதிகள் கொடுத்தால் கூட்டணி பற்றி யோசிக்கலாம் என்கிற ரீதியில் கமல் கூறியதாக சொல்கிறார்கள்.

ஆனால் 3 சதவீத வாக்கு வங்கி உள்ள கட்சிக்கு 10 முதல் 14 சீட்டுகள் வரை வழங்க இயலும் என்றும் இதையே கூட ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உதயநிதி பதில் அளித்ததாக சொல்கிறார்கள். 3வதாக கமல் – உதயநிதி சந்திப்பு ஆர்.ஏ.புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது. இதன் பிறகே இந்த சந்திப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கமல் தரப்பில் இருந்து திட்டமிட்டு இந்த தகவலை கசியவிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் கமலும் கூட திமுக உடனான கூட்டணியை விரும்புவதாக சொல்கிறார்கள். ரஜினி, மூன்றாவது அணி என்பதெல்லாம் கறை ஏறாது. ஆனால் திமுக கூட்டணியில் கணிசமான தொகுதிகளில் வென்று தொங்கு சட்டசபை அமைந்தால் ஆட்சியில் பங்கு என்கிற கனவும் கமலுக்கு உள்ளதாம். எனவே உதயநிதியை தொடர்ந்து ஸ்டாலினிடம் விரைவில் கமல் பேச்சுவார்த்தை நடத்துவாராம்.