சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரை ஏற்கனவே சந்தித்து திமுக அறிவித்த ரூபாய் 25 லட்சம் நிதி உதவியையும் அளித்து கனிமொழி ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினும் அங்கு சென்றுள்ளார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் விவகாரத்தில் துவக்கம் முதலே ஆவேசமாக செயல்பட்டு வருபவர் கனிமொழி. இருவரும் சிறையில் உயிரிழந்த தகவல் வெளியான அன்றே சென்னையில் டிஜிபியை நேரில் சந்தித்து மரணத்திற்கு நீதி வேண்டும் என்று மனு அளித்துவிட்டு வந்தார் கனிமொழி. இந்த சமயத்தில் கனிமொழியுடன் டிஜிபி அலுவலகம் வருவதற்கு கூட திமுக முக்கிய நிர்வாகிகள் தயங்கியதாக சொல்கிறார்கள். கொரோனா பரவி வரும் நிலையில் எதற்கு இப்படி ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று பலர் ஒதுங்கினர். ஆனால் கனிமொழி விடாப்பிடியாக இருந்து டிஜிபியை சந்தித்தார்.

இதற்கு அடுத்த நாளே கனிமொழி வீட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. இதன் பின்னணியில் சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணத்தை வைத்து தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் திமுக பதற்றத்தை உருவாக்கியது தான் என்று சொல்லப்பட்டது. ஆனால் சர்ச்சையான பிறகு பாதுகாப்பை திரும்ப வழங்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். ஆனாலும் கூட தனது வேகத்தை குறைக்காத கனிமொழி உடனடியாக சாத்தான்குளம் சென்றார்.

இதற்கிடையே ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்திற்கு திமுக 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்தது. இதனை நேரடியாக கொண்டு சென்று கொடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலால் ஸ்டாலின் செல்ல முடியாத நிலை இருந்தது- உதயநிதியை அனுப்ப துர்கா ஸ்டாலின் மறுத்துவிட்டதாக சொல்கிறார்கள். இதனால் தான் வேறு வழியில்லாமல் அப்போது கனிமொழியிடம் செக்கை கொடுத்து ஜெயராஜ் மனைவியிடம் ஒப்படைக்க திமுக மேலிடம் ஒத்துக் கொண்டது. இந்த விஷயத்திலும் கனிமொழி சரியாக ஸ்கோர் செய்துவிட்டார்.

இதனால் வேறு வழியே இல்லாமல் ஸ்டாலின் அல்லது உதயநிதி சாத்தான்குளம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு செய்த அரசியல் கனிமொழிக்கு மட்டும் சாதகமாகிவிடக்கூடாது என்பதில் மட்டும் திமுக மேலிடம் கவனமாக இருந்ததாக சொல்கிறார்கள். இதனால் தான் கொரோனா ரிஸ்க் இருந்தும் கூட உதயநிதி சாத்தான்குளம் சென்றதாக கூறுகிறார்கள். ஆனால் ஏற்கனவே தான் திமுக சார்பில் அங்கு சென்று வந்துவிட்ட நிலையில் தற்போது எதற்கு உதயநிதியை திமுக மேலிடம் அனுப்புகிறது என்று கனிமொழி வருத்தம் அடைந்ததாக சொல்கிறார்கள்.

மேலும் எந்த ஒரு விஷயத்திலும் கனிமொழி முக்கியத்துவம் அடைந்துவிடக்கூடாது என்று திமுக மேலிடம் கவனமாக இருப்பதாகவும், சாத்தான்குளம் கனிமொழியின் தொகுதி அதனால் அவர் முன்னிலையில் இருந்து ஜெயராஜ் பென்னிக்ஸ் விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கை மேற்கொண்டார். திமுக சார்பிலான நிதியை கூட கனிமொழி கொடுத்த நிலையில் திடீரென உதயநிதியை சாத்தான்குளம் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன என்று கனிமொழி குரூப் கேள்வி எழுப்புவதாகவும், சொல்கிறார்கள். திமுகவை பொறுத்தவரை ஸ்டாலின் அதற்கு அடுத்து உதயநிதி ஆகியோர் தான் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வேறு யாருக்கும் முக்கியத்துவம் இருக்க கூடாது என்பது தான் மேலிடத்தின் நிலைப்பாடு என்றும் அதன் வெளிப்பாடு தான் சாத்தான்குளம் என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள்.