பேனர் சரிந்து விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ பெற்றோரை சத்தம் இல்லாமல் சென்று உதயநிதி சந்தித்த போதும் ஒரு சில ஊடகங்கள் அதனை மோப்பம் பிடித்து அங்கு சென்றுவிட்டன.

வழக்கமாக உதயநிதி எங்கு சென்றாலும் அவருடன் ஒரு போட்டோகிராபர் மற்றும் வீடியோ கேமரா மேன் இருப்பது வழக்கம். ஆனால் நேற்று திடீரென சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீ வீட்டிற்கு தனது நெருங்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் அழைத்துக் கொண்டு உதயநிதி சென்றார். 

ஆனால், இந்த தகவல் அறிந்து கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர் அங்கு சென்றுவிட்டார். அதே சமயம் மற்ற ஊடகங்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. சுபஸ்ரீ பெற்றோருக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு வெளியே வந்த போது மேலும் சில ஊடகங்களும் அங்கு வந்து சேர்ந்தன. இதனால் வேறு வழியின்றி அவர்களிடம் உதயநிதி பேசினார்.

அப்போது சுபஸ்ரீ மரணத்தை நான் அரசியலாக்கவிரும்பவில்லை என்று கூறிவிட்டு சென்றார் உதயநிதி. அதோடு மட்டும் அல்லாமல் சுபஸ்ரீ பெற்றோரிடம் நீண்ட நேரம் உதயநிதி பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் சொன்னது அத்தனையையும் கேட்டுக் கொண்டார். மேலும் அவர்களின் கோரிக்கையை ஏற்று இனி தங்கள் கட்சி சார்பில் பேனர் வைக்கப்போவதில்லை என்று உறுதி அளித்தார்.

இப்படி சுபஸ்ரீ பெற்றோரை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சென்று சந்தித்துவிட்டு திரும்பிய உதயநிதிக்கு ஒரு பக்கம் பாராட்டு குவிந்து வருகிறது. அதே சமயம் திமுகவினர் இன்னும் பல இடங்களில் பேனர் வைத்துக் கொண்டு தான் இருப்பதாகவும் அதனை உடனடியாக நிறுத்த உதயநிதி முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுகின்றன.