சென்னையில் கல்வி சமூகநீதி கூட்டாட்சி தத்துவம் குறித்த தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
சென்னை கலைவாணர் அரங்கில், திமுக மாணவர் அணியின் சார்பாக கல்வி, சமூகநீதி கூட்டாச்சித் தத்துவம் குறித்த தேசிய அளவிலான இரண்டாம் நாள் மாநாட்டின் நிறைவு விழாவில்,திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘தங்கை அனிதாவின் அண்ணன் என்கிற ஒரே தகுதியின் அடிப்படையில் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்றும், அனிதாவின் மரணம் தற்கொலை இல்லை, அது கொலை.

மத்தியில் இருந்த பாஜக அரசும், அதன் கூட்டணியில் இருந்து அதிமுக அரசும் சேர்ந்து செய்த கொலை கடந்த 4 ஆண்டுகளில் 16 பேர் நீட் தேர்வால் மரணமடைந்து உள்ளனர். இறந்த மாணவர்கள் குடும்பத்தினர் தன் கையை பற்றி, நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று அழுதது இன்னும் தனக்கு நியாபகம் இருக்கிறது. இந்நிலையில் நீட்டுக்கு எதிராக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுனர் டெல்லிக்கு அனுப்பாமல் வைத்திருக்கிறார்.

திமுக அரசின் கோரிக்கையை, எச்சரிக்கையை ஏற்று விரைவில் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்புவார். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவாறு நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு கிடைக்கும். 7 கோடி மக்களின் உணர்வை மதிக்கும் வகையில் ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மௌனம் காப்பது 7 கோடி தமிழர்களை அவமதிக்கும் செயல். நீட், புதிய கல்வி கொள்கை ஆகியவற்றிற்கு எதிராக தொடர்ந்து தமிழகம் போராடும் என்றும், பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஓரணியில் நின்று இவற்றிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !
