நாள் குறித்த அறிவாலயம்.. அமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. பரபரக்கும் கோட்டை வட்டாரங்கள் !
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக இளைஞரணி செயலாளரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, ஆளுங்கட்சி என்ற அந்தஸ்தோடு சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் உதயநிதி ஸ்டாலின். திமுக ஆட்சி அமைந்ததுமே உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. இதை அடுத்து, தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விழாக்களில், உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதாவது, அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில், சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
மேலும், அரசு விழாக்களில் அவருக்காக அமைச்சர்கள் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று, அவரது நெருங்கிய நண்பரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல் ஆளாக குரல் கொடுத்தார். தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக வேண்டும் என, குரல் கொடுத்து வருகின்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஆனாலும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி எப்போது கிடைக்கும் என்ற கேள்வி தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில்தான், உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகளைக் கிளப்பி விட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்து ஒராண்டு நிறைவடைய உள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அதில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில், உதயநிதி தனது காரில் செய்துள்ள மாற்றம் அமைச்சராகப் போகிறாரா என்ற யூகங்களை எழுப்பியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் காரில் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்தான் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போகிறது என்ற பேச்சுக்கு காரணமாக அமைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் காரில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் அமைச்சர்களின் கார்களில் இலச்சினைப் பொருத்துவதற்கானது.
அதே போல, உதயநிதியின் காரில் பொருத்தப்பட்டுள்ளதால், உதயநிதி அமைச்சர் பதவிக்கு தயாராக உள்ளதாகவும் அதனால்தான் இந்த மாற்றம் செய்துள்ளார் என்று பேச்சுகள் எழுந்துள்ளன. இளைஞர் நலன் துறை உதயநிதிக்கு ஒதுக்கப்படலாம் என்றும், அது அநேகமாக மே 7 ஆக இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !