சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் பலருக்கும் எப்படியாவது அவர்களது பெயரோடு பட்டமும் வந்து சேர்ந்து விடுகிறது.  ரஜினிக்கு "சூப்பர் ஸ்டார்", விஜய்க்கு "இளைய தளபதி", அஜித்துக்கு "தல" என்பதைப்போல தன்னுடைய படங்களில் நடிக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பட்டத்தை தனது படம் மூலம் கொடுப்பது, இயக்குநர் சீனு ராமசாமியின் வேலை. அவர், அந்தப் பட்டப் பெயரோடு படத்தின் டைட்டிலில் போட்டு விட, பட்டம் நிலைத்து விடுகிறது. இதை வாடிக்கையாக செய்து வருகிறார்.

இப்படித்தான், நடிகர் விஜய் சேதுபதிக்கு "மக்கள் செல்வன்" என பட்டம் கொடுத்துள்ளார். தற்போது, உதயநிதி நடிப்பில் வெளியாகும் கண்ணே கலைமானே படத்தின் டைட்டில் கார்டில், அவருக்கு "மக்கள் அன்பன்" என பெயர் சூட்டியிருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நடிகர்  உதயநிதி, பட டைட்டிலில் இருந்து பட்டத்தை எடுத்துவிடுமாறு கூறி, அதை  எடுக்க வைத்திருக்கிறார்.

இந்த பட்டம் பற்றி  அவர் கூறும்போது, பட்டம் என்பது தானாக வர வேண்டும், நாம் தேடிப் போகக் கூடாது. மேக்கப் போடும்  சினிமாக்காரர்களுக்கு பட்டம் என்பதே தேவையில்லை. திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கு "கலைஞர்" என்ற பட்டமும், ஸ்டாலினுக்கு "தளபதி" என்ற மக்கள் கொடுத்த பட்டங்கள், தகுதியின் அடிப்படையில் வந்ததால், அவை நிலைத்து விட்டது.

அதனால், எனக்கான தகுதி வரும்போது, கொடுக்கப்படும் பட்டங்கள்தான் நிலைக்கும் என பவ்யமாக கூறினார் உதயநிதி ஸ்டாலின்.