கோ பேக் மோடி... கெட் அவுட் மோடியாக மாற வேண்டும்.! பாஜகவிற்கு ஒரு சீட் கூட கிடைக்காது- சீறும் உதயநிதி
கடந்த காலங்களில் கோ பேக் மோடி என்று கூறிய நிலையில், தற்போதுள்ள எழுச்சியால் கெட் அவுட் மோடியாக மாற அனைவரும் திமுகவுக்கு வாக்களியுங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சூடு பிடிக்கும் தேர்தல் களம்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்து அதன் வேட்பாளர்களை அறிவித்து தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு பக்கம் தீவிராக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், மறு பக்கம் உதயநிதி வீதி வீதியாக மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். கடந்த ஐந்து தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.
பாஜகவிற்கு ஒரு சீட் கூட கிடைக்காது
நேற்று ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டி.ஆர் பாலுவை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே திறந்தவெனில் நின்றபடி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளும், தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கான வாக்குறுதிகளையும் கூறி பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே பிரதமர் மோடி தமிழகம் வருவதாகவும், கடந்த 10 நாட்களாக தமிழகத்தையே சுற்றி வந்தாலும் பாஜகவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு சீட்டு கூட கிடைக்காது எனவும் தெரிவித்தார்.
கெட் அவுட் மோடி
கடந்த தேர்தலின் போது கோ பேக் மோடி என்று கூறி வந்த நாம் தற்போது கெட் அவுட் மோடி என்று கூறும் வகையில் திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்று நாம் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் அவருக்கு ஒரு குட்டு என்பதை நாம் நினைவில் கொண்டு தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கி அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்