நடிப்பு, சினிமா தயாரிப்பு, விநியோகஸ்தர் என முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் என தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போதிருந்தே உதயநிதி ஸ்டாலினுக்கு மாநில இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என கட்சியில் ஆங்காங்கே குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. திருச்சி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களும், திமுகவின் துணை அமைப்புகளும் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றித் தலைமைக்கு அனுப்பிவைத்தன.

திருச்சி நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் எந்தப் பொறுப்பையும் பதவியையும் எதிர்பார்த்து நான் பிரச்சாரம் செய்யவில்லை. திமுகவின் கடைக்கோடி தொண்டர்களில் ஒருவன் என்ற ஒரு பொறுப்பு போதும்” என்றும் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தொகுதியான நாங்குனேரியை திமுகவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக குறைந்தது 200 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என அதிரடியாக பேசினார். மேடையில் இருந்த ஸ்டாலினும் அந்த பேச்சை சிரித்து ரசித்து கேட்டார்.

இதனிடையே இம்மாத இறுதிக்குள் திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதியை நியமிக்கும் பணிகள்  நடைபெறுவதாக கூறப்படுகிறது. உதயநிதிக்காக , திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பதவியிலிருந்து வெள்ளக்கோயில் சாமிநாதன் ராஜினாமா செய்துவிட்டதாகவும், தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் தெரிகிறது.