தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பது இந்தி-இங்கிலீஷே என சொல்லாமல் விட்டது ஏன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதற்கு முன்புவரை ஆந்திரா, கேரளாவை உள்ளடக்கி மெட்ராஸ் மாகாணமாக இருந்தது. இதன்பிறகு தமிழ் மாநிலம் என்ற உரிமையைப் பெற்றது. பின்னர் 1967-ல் மெட்ராஸ் மாகாணம் தமிழ் நாடு எனப் பெயர் மாற்றப்பட்டது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்பட்டுவருகிறது. இந்தித் திணிப்பு நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஊடுருவும்போது தமிழகம் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.

 
மொழிவாரி அமைக்கப்பட்டதையொட்டி தமிழ் நாடு நாள் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். அதன்படி இந்த ஆண்டு நவம்பர் முதல் தேதியை தமிழ் நாடு நாளாக தமிழக அரசு கொண்டாடியது. தமிழ் நாடு நாள் கொண்டாப்பட்ட நிலையில், போக்குவரத்து போலீஸார் வழங்கும் ஒப்புகைச் சீட்டுகளில் ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே இடம் பெற்றிருப்பதை  நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி வெளிப்படுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக படத்துடன் ட்விட்டரில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதில், “மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட தமிழக அமைப்பு நாளான நேற்று போக்குவரத்து போலீசார் வழங்கிய ஒப்புகைசீட்டில் தமிழை காணவில்லை. ‘இந்தியே தேசியமொழி’ என அமித்ஷா பேசியபோது, ‘இருமொழி கொள்கையைக் கடைபிடிக்கிறோம்’ என்றார் முதல்வர்.  அந்த இருமொழி என்பது இந்தி-இங்கிலீஷே என சொல்லாமல் விட்டது ஏன்?” என்று நையாண்டியாகக் கேள்வி எழுப்பியுள்ளார் உதயநிதி.