டிஎம்கே என்றால் துரை முருகன் கதிர்ஆனந்த் என்று சொல்லலாம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். 
வேலூர்  நாடாளுமன்றத் தேர்தல், வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. வேலூரில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கே.வி.குப்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் திறந்த வேனில் நின்றபடி உதயநிதி பிரசாரம் செய்தார். 
 “ஏப்ரலில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியை சேர்த்து 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்தத் தேர்தல் முடிவு மோடிக்கும் அவருடைய அடிமைகள் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மரண அடியைக் கொடுத்தது. தங்களால் எங்கும் வெற்றிபெற முடியாது என்பது தெரிந்ததாலேயே வேலூரில் சூழ்ச்சி செய்து தேர்தலை நிறுத்தினார்கள். 
வேலூரில் திமுகவின் வெற்றி சற்று தாமதமாகியிருக்கிறதே தவிரம் அந்த வெற்றியை அவர்களால் தடுக்க முடியாது. 39-வது எம்.பி.யாக கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்துக்கு நிச்சயம் செல்வார். டி.எம்.கே., என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் என்று மட்டுமல்ல,  டி.எம்.கே. என்றால் துரை முருகன் கதிர்ஆனந்த் என்றும் சொல்லலாம். எனவே, அவரை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திமுக என்றால் திருக்குவளை மு. கருணாநிதி என்று திமுகவினர் விளக்கம்கொடுத்துவந்தார்கள். தற்போது டிஎம்கே என்றால் துரைமுருகன் கதிர் ஆனந்த் என்று உதயநிதி புதிய விளக்கத்தைச் சொல்லி அதிரடித்திருக்கிறார்.