சாத்தான்குளம் வழக்கை மூடிமறைக்க நினைத்த அரசை, தன் அறிக்கைகள், கண்டனங்களால் செயல்பட வைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நன்றி  தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் ஜெயராஜ் - பெனிக்ஸ் மரணமடைந்த வழக்கில் போலீஸார் சப் இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சப் இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட காரணமாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்தனர் ஜெயராஜ் - பெனிக்ஸ் குடும்பத்தினர். இந்நிலையில் இந்த விவகாரத்தை திமுக கையில் எடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுத்ததே போலீஸார் கைதுக்கு காரணம் என்று சமூக ஊடகங்களில் திமுகவினர் கருத்திட்டுவருகிறார்கள்.


இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வர காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “சாத்தான்குளம் வழக்கை மூடிமறைக்க நினைத்த அரசை, தன் அறிக்கைகள், கண்டனங்களால் செயல்பட வைத்த, ‘கலங்காதீர்கள் நாங்கள் இருக்கிறோம்’ என்ற ஆறுதலை தன் செயல்கள் மூலம் அக்குடும்பத்துக்கு உணர்த்திய கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு @dmk_youthwing சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்!” என்று தெரிவித்துள்ளார்.


இன்னொரு ட்விட் பதிவில், “இவ்வழக்கில் நீதிவேண்டி மனிதஉரிமை கமிஷனுக்கு சென்றது முதல் அக்குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் சொன்னது வரை தொகுதி மக்களுக்காக சிறப்பாக உழைக்கும் எம்.பி. @KanimozhiDMK அவர்களுக்கும், வணிகர் அமைப்பு, தூத்துக்குடி மக்கள், மீடியா தோழர்கள், சமூக ஊடகங்களில் களமாடியவர்கள் அனைவருக்கும் நன்றி!” என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு ட்வீட் பதிவில், “சாத்தான்குளம் வழக்கை தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாட்சியம் அளித்த காவலர் ரேவதி... உங்களை போன்றோரின் செயல்பாடுகளே ஏழை, எளிய மக்களுக்கு இச்சமூகத்தின் மீதான பிடிப்பை, நம்பிக்கையை அதிகரிக்க செய்கின்றன. அன்பும் நன்றியும்!” என்று உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.