திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் எடுத்துள்ள முடிவு அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளை உற்சாகமாக்கியுள்ளது.

இளைஞர் அணிச் செயலாளர் ஆன முதல் நாளே அன்பகம் சென்ற உதயநிதி தனது பணிகளை தொடங்கினார். முதற்கட்டமாக இளைஞர் அணியில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கு ஆட்களை நியமிக்கும் பணியை தான் அவர் துவக்கினார். இதனை அடுத்து மாநிலம் முழுவதும் இளைஞர் அணி நிர்வாகிகளில் காலியாக இருக்கும் பதவிகள் குறித்த விவரம் திரட்டப்பட்டு வருகிறது. 

மேலும் இளைஞர் அணி பொறுப்பில் ஆக்டிவாக இல்லாதவர்களின் லிஸ்டும் மாவட்ட வாரியாக தயாராகி வருகிறது. இதற்கு காரணம் அந்த பதவிகள் இன்னும் 15 நாட்களுக்குள் நிரப்பப்பட உள்ளதாக சொல்கிறார்கள். நிர்வாகிகள் நியமனம் முடிந்த பிறகு தான் உதயநிதி சுற்றுப்பயணம் செல்ல முடியும். எனவே இந்த பணியை அன்பில் மகேஷ் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக சொல்கிறார்கள். 

அதோடு மட்டும் அல்லாமல் உதயநிதி ரசிகர் மன்றத்தில் ஆக்டிவாக இருப்பவர்களின் பட்டியலும் பெறப்பட்டு வருகிறது. ஏனென்றால் காலியாக உள்ள இளைஞர் அணி பொறுப்பாளர்கள் பதவிகளில் முழுக்க முழுக்க உதயநிதியின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தான் நியமிக்கப்பட உள்ளதாக கூறுகிறார்கள். இவர்கள் தவிர மாவட்ட அளவில் துடிப்பாக உள்ள திமுக வழக்கறிஞர்களுக்கும் இளைஞர் அணியில் முக்கிய இடம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த தகவல்களை அறிந்த உதயநிதியின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கடந்த 2 நாட்களாக அன்பில் மகேஷ் வீடு மற்றும் அன்பகத்தில் குவிந்து வருகின்றனர். அவர்களில் தகுதியானவர்கள் மற்றும் தங்களுக்கு உகந்தவர்களாக பார்த்து லிஸ்ட் தயார் செய்து வருகிறாராம் அன்பில் மகேஷ். முழு அளவில் பட்டியல் தயாரான பிறகு அதனை நேரடியாக தானே ஸ்டாலினிடம் கொடுக்க உள்ளதாக உதயநிதி கூறியுள்ளார். ஸ்டாலின் ஒப்புதல் கிடைத்த பிறகு இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் பட்டியல் ரிலீஸ் ஆகும் என்கிறார்கள். அப்போது உதயநிதியின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் திமுக நிர்வாகிகளாகியிருப்பார்கள் என்றும் பேசப்படுகிறது.