two leaves case postponed to 30 th otober
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் அடுத்த கட்ட விசாரணை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சி இரண்டாக உடைந்து, சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வந்தது.
சசிகலா சிறைக்கு சென்றதால் அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். இந்த நேரத்தில், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.

ஆனால், ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும் முன், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்தன. டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை நவம்பர் 10-ந் தேதிக்குள் தேர்தல் கமிஷன் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள், அ.தி.மு.க.வின் இரு அணிகளிடமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6-ந் தேதி யும், 16 ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து இன்று மூன்றாம் கட்ட விசாணை நடைபெற்றது. இரு அணிகளின் ஆதரவாளர்களும் வழக்கறிஞர்களும் விசாரணைக்கு ஆஜராகினர். இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய விசாரணை ஆறு மணிவரை நீடித்தது. இன்றைய விசாரணைக்கு பின்னர் இவ்வழக்கின் மறுவிசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
