இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அமமுக துணைபொதுச்செயலாளர் தினகரன் டெல்லி பாட்டிலா நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்த போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அப்போது இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் உள்ளிட்ட சிலர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி டெல்லி பாட்டியால நீதிமன்றத்தில் தினகரன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கு தொடர்பாக இன்று நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குற்றப்பதிவு நகலை பெற்றுக்கொண்டார். இந்த வழக்கின் விசாரணை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.