Asianet News TamilAsianet News Tamil

அதிமுக.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட தினகரனும்... திமுக.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட அழகிரியும்

two expelled politicians from their parties playing main role in tamil nadu politics today
two expelled politicians from their parties playing main role in tamil nadu politics today
Author
First Published Dec 27, 2017, 5:05 PM IST


அதிமுக.,வில் இருந்து ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் ஒரு பக்கம் இப்போது பரபரப்பு அரசியலை செய்து வருகிறார். ஜெயலலிதா மறைந்த நிலையில், அதிமுக.,வை கட்டுக்குள் கொண்டு வந்து, ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற அவர் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் தமிழகத்தில்  மட்டுமல்லாது, தேசிய அளவிலும் பெரும் கலவரத்துடன் பார்க்கப் படுகிறது. இந்நிலையில், திமுக.,விலும் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி இப்போது வாய் திறந்திருக்கிறார். அதற்குக் காரணமாக அமைந்ததும் ஆர்.கே.நகர் தேர்தல்தான்! 

தினகரன் ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று பார்த்தால், இன்றைய பரபரப்பை ஏற்படுத்தியிருப்பவர் திமுக.,தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி, தற்போதைய செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை திமுக., முன்னேறாது என்று தன் வழக்கமான அரசியலை இன்று மீண்டும் துவங்கியுள்ளார். 

ஆர்.கே.நகர் பலரையும் பலவாறாகப் பேச வைத்து விட்டது. முன்னர் திமுக., மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் எப்படி, எந்த விதமான நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றதோ அதே நுட்பத்தை இப்போது தினகரன் ஆர்.கே.நகரில் கையாண்டுள்ளார். அன்று திமுக., திருமங்கலத்தில் விதைத்ததை இன்று ஆர்.கே.நகரில் அறுவடை செய்திருக்கிறது. தினகரன் கொடுத்த அடியில் திமுக., டெபாசிட் பணத்தை இழந்து, கேவலப்பட்டு நிற்கிறது. 

திமுக.வுக்கு ஏற்பட்ட இந்த கதி குறித்து இப்போது கட்சியினர் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக.,வில் முன்னர் மத்திய அமைச்சராகவும், கட்சியில் தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ளவராகவும் இருந்த மு.க.அழகிரி, தனது சகோதரர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உள்கட்சி அரசியலில் ஈடுபட்டார் என்று காரணத்தால், கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். அன்று அறுபட்டுப் போன அரசியலை இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் அழகிரி. 

கலைஞர் ஓய்வுக்கு முன் திமுக வளர்ச்சிப்பாதையில் சென்றது என்றும், ஸ்டாலின் தலைமையேற்றது முதல் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது திமுக என்றும் கூறியுள்ளார் அழகிரி. 

இதனிடையே,  திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்தான் மு.க.அழகிரி என்று திமுக.,வின் ஜெ.அன்பழகன் காட்டத்துடன் விமர்சித்துள்ளார். 

முன்னதாக, இன்று செய்தி சேனல் ஒன்றில் தொலைபேசி வழியே பேசிய மு.க. அழகிரி, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக தோல்வி அடைந்தது ஏன்? இதில் இருந்தே ஸ்டாலின் எவ்வாறு செயல்படுகிறார் என்பது தெரிய வருகிறது. ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறினார். 

மேலும், கட்சியில், புதிதாக வருபவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்த வேண்டும். கட்சியில் இருந்து வெளியேறியவர்களையும், துரோகம் செய்தவர்களையும் கட்சியில் மீண்டும் சேர்த்து பொறுப்பு கொடுப்பதை எப்போது நிறுத்துகிறார்களோ அப்போதுதான் திமுகவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று காட்டமாகக் கூறினார் அழகிரி.

வெறுமனே வேனில் ஏறி பிரசாரத்துக்கு போய்விட்டால் வெற்றி கிடைக்காது. களப்பணி செய்ய வேண்டும். பண நாயகம், ஜனநாயகம் தோல்வி என்று கூறுவது வழக்கமாகி விட்டது. தொகுதிக்காக உழைக்க வேண்டும் என்று கூறிய அழகிரி, ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற சூத்திரத்தின் சூத்திரதாரியாக, எப்படி தாம் திருமங்கலத்தில் களப் பணி ஆற்றினோம் என்பதையும் அதில் கோடிட்டுக் காட்டியுள்ளார். 

திருமங்கலத்தில் திமுக சார்பில் எப்படி களப்பணி செய்தோம் என்று நீங்கள் வந்து பார்த்திருந்தால்தான் தெரிந்து இருக்கும். வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் தி.மு.கவில் மாற்றம் தேவை என்று தனது உழைப்பையும் தொகுதி அணுகுமுறையையும் பட்டியலிட்டுக் கூறினார் மு.க.அழகிரி.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் பதில் கொடுக்காமல், அவர் சார்பில் அக்கட்சியின் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. பதில் கொடுத்துள்ளார். அவரது பதிலில்,  திமுகவில் இருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டவர் மு.க.அழகிரி. அவர் பொறாமையால் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கிறார். திமுக மீது மு.க.அழகிரிக்கு அக்கறையிருந்தால் முன்பே கருத்து கூறியிருக்க வேண்டியதுதானே. மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களின் உழைப்புக்கு ஏற்ற பொறுப்பு கொடுப்பது வழக்கமானதுதான்” என்று கூறியுள்ளார்.  

ஆனால் இதனால் எல்லாம் அயர்ந்து விடுபவர் இல்லை அழகிரி என்பதும், தினகரனுக்கு எப்படிப்பட்ட நெருக்கடியை அவர் கொடுப்பார் என்பதும் திமுக.,வினர் உள் வட்டத்தில் உலாவரும் பேச்சுக்களாகத் திகழ்கின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios