தமிழகத்தில் 22 தொகுதி இடைத்தேர்தலை போலவே கர்நாடகாவில் நடைபெறும் 2 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் 104 இடங்களைப் பிடித்தும் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளமும் சேர்ந்து ஆட்சியை அமைத்தன. கடந்த ஓராண்டாகவே இந்த ஆட்சியைக் கவிழ்க்க பாஜக பல முயற்சிகளை செய்துவருகிறது. ஆனால், காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி முதல்வராக நீடித்துவருகிறார். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும் கர்நாடக பாஜக எதிர்பார்த்துவருகிறது.
இந்நிலையில் மே 19 அன்று கர்நாடகா மாநிலத்தில் குந்த்கோல், சிஞ்சோலி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. குந்த்கோல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மறைவாலும், சிஞ்சோலி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஜகவுக்கு தாவியதால் பதவியை ராஜினாமா செய்ததாலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸின் இந்த இரு தொகுதிகளையும் கைப்பற்றுவதன் மூலம் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறது. அதை முறியடிக்க காங்கிரஸ் கட்சியும் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறது.


தற்போது 222 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு 116 பேர் உள்ளனர். மெஜாரிட்டியைவிட 4 உறுப்பினர்கள் கூடுதலாக உள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியில் 4 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு அவர்கள் அணி மாறினால்,ஆளும் கட்சிக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. அதனால், இந்த இரு தொகுதிகளையும் கைப்பற்றும் முயற்சியில் காங்கிரஸ் - பாஜக கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் 22 இடைத்தேர்தல் முடிவுகள் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கர்நாடகாவிலும் இரு தொகுதிகளின் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.