27அமாவாசை முடிந்தவுடன் ஆட்சி முடிந்துவிடும் என்று  இரண்டு அமாவாசைகள் கூறுகிறார்கள். அந்த இரண்டு அமாவாசைகள் யாரென்று ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கே தெரியும்.

தைரியம் இருந்தால் தெம்பு இருந்தால் சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்கள். முடக்கி விட்டு தேர்தலை வைத்து பாருங்கள் அதில் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறாது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நாளையுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திண்டுக்கல் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றபொழுது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்திருந்தது. கொரோனாவைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு தமிழகத்தில் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தினோம். தமிழகத்தில் முதலாவது அலையின் போது அதிமுக ஆட்சியில் இருந்தது. அப்பொழுது ஒரு கோடி அளவுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தடுப்பு ஊசி கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது திமுக ஆட்சி. அதனால், கடந்த எட்டு மாதங்களில் 10 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது திமுக அரசின் சாதனை ஆகும். இதுபோன்ற தொடர் நடவடிக்கையால் மூன்றாவது அலையில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்தியாவிலேயே கொரோனா வார்டுக்கு சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்த முதல்வர், நம்முடைய முதல்வர் மட்டும்தான். 

திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோது தமிழக அரசு கஜானா காலியாகக் கிடந்தது. அரசுக்கு 5 லட்சம் கோடி கடனை விட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், தேர்தல் வாக்குறுதியாக கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என ஸ்டாலின் கூறியது போல் ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு தவணையாக ரூ 4,000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஸ்டாலின் சொன்னது போல் பெண்களுக்கு உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் கண்டிப்பாக வழங்குவார். திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு நடைபெறுகிற முதல் மாநகராட்சி தேர்தல் இது. மாநகராட்சியாக திண்டுக்கல் அறிவிக்கபட்டிருந்தாலும் தற்பொழுதும் பெரிய கிராமம் போலவே காட்சி அளித்து வருகிறது .10 ஆண்டு கால ஆட்சியில் திண்டுக்கல் கவனிப்பாரின்றி இருந்தது.

பச்சைப் பொய்களை பேசிவரும் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக சட்டமன்றத்தை முடக்க போகிறார்கள் என கூறி வருகிறார். அவ்வாறு முடக்கினால் மீண்டும் தேர்தல் வைக்க வேண்டும். தைரியம் இருந்தால் தெம்பு இருந்தால் சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்கள். முடக்கி விட்டு தேர்தலை வைத்து பாருங்கள் அதில் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறாது. 27அமாவாசை முடிந்தவுடன் ஆட்சி முடிந்துவிடும் என்று இரண்டு அமாவாசைகள் கூறுகிறார்கள். அந்த இரண்டு அமாவாசைகள் யாரென்று ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கே தெரியும். இவர்களுக்கு எல்லாம் நம்முடைய ஆட்சியைப் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.”