பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் ஊரடங்குக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் ரஜினி வெளியிட்ட வீடியோவை ட்விட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஞாயிறு அன்று மக்கள் ஊரடங்கு முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் அழைத்த இந்த ஊரடங்குக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி வேண்டுகோள் விடுத்து வீடியோ பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார்.

 
அந்த வீடியோவில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது. அது மூன்றாம் நிலைக்குப் போய்விடக் கூடாது. வெளியே மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் 12 முதல் 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே மூன்றாம் நிலைக்குப் போகாமல் தடுத்து நிறுத்த முடியும். அதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் நிலையில் இருக்கும்போது, மக்களை அரசாங்கம் எச்சரித்தது. அங்கே அரசாங்கம் ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், மக்கள் அதை உதாசீனப்படுத்தினார்கள். அதனால் பல ஆயிரம் உயிர்கள் பலியாகிவிட்டன. அதே மாதிரி நிலை இந்தியாவில் வரக் கூடாது. எனவே இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவருமே 22-ம் தேதி ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.” என்று ரஜினி வீடியோவில் பேசியிருந்தார்.
இந்நிலையில் ரஜினி இன்று வெளியிட்ட வீடியோ பதிவை ட்விட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதால் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. யாரும் வெளியே போகாமலேயே இருந்தால், கொரோனா வைரஸ் 12-14 மணி நேரத்தில் பரவ முடியாது என்று ரஜினி தெரிவித்தது தவறான தகவல் என்று பலரும் கூறிவரும் நிலையில், ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. ஆனால், அந்த வீடியோ யூடியூப் தளத்தில் நீக்கப்படவில்லை.