டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள தங்க.தமிழ்செல்வன் அடுத்து எந்தக் கட்சியில் இணையப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திடீரென அதிமுகவை புகழ்ந்து தள்ளியது, எடப்பாடி பழனிசாமியை பாராட்டியதால் தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. டி.டி.வி.தினகரனை கடுமையாக தங்க தமிழ்ச்செல்வன் திட்டிய ஆடியோவும் அதனை உறுதி செய்தன. 

இந்நிலையில் நினைத்தே பார்க்க முடியாத இடத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அமமுகவிலிருந்து வெளியேறிய தேனி கர்ணன் திவாகரன் துவங்கிய அண்ணா திராவிடர் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அவர் தங்க தமிழ்செல்வனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், ‘’நான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவன். எங்கள் தளபதியாக இருந்தவர் தங்க தமிழ்செல்வன். நானும், அமமுக தலைமை செயல்பாடு பிடிக்காமல்தான், கட்சியை விட்டு வெளியேறி, இப்போது, அண்ணா திராவிடர் கழகத்தில் இணைந்துள்ளேன். 

தங்கத் தமிழ்ச்செல்வனையும் சந்தோஷமாக எங்கள் கட்சியில் இணைக்கப்போகிறோம். அண்ணா திராவிடர் கழகம், கட்சியின், திவாகரன், ஜெய்ஆனந்த் ஆகியோர் தங்கத் தமிழ்ச்செல்வனை அழைக்க தயாராக இருக்கிறார்கள். சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும்வரை எங்களுடன்தான், தங்கத் தமிழ்ச்செல்வன் இருப்பார். செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றார். ஏனெனில் அவர் ஏற்கனவே திமுகவிலிருந்தவர்.

இதனால் அவருக்கு இழப்பு இல்லை. ஆனால், அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ள யாரும் திமுகவுக்கு செல்ல மாட்டார்கள். அதுதான் அதிமுக.அதிமுக தொண்டர்கள் இப்போது, அண்ணா திராவிடர் கழகத்திற்கு வர வேண்டும். அதிமுக தலைமை சசிகலா வெளியே வரும் வரை, எங்கள் கட்சியிலேயே அவர்கள் இருக்க வேண்டும். சசிகலா வெளியே வந்த பிறகு அதிமுகவுக்கு அவர் தலைமையில், ஒற்றைத் தலைமை ஏற்படும். அதன்பிறகு தினகரன் தனி மரமாவார்’’ என அவர் கூறி உள்ளார். ஆனால் தங்க தமிழ்செல்வன் இந்த அழைப்பை ஏற்பாரா? எனத் தெரியவில்லை.