மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

அமமுக சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை வகித்தார். கூட்டத்துக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில், மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து செயல்படுவோம் என முதல்வர் தெரிவித்தார். இத்திட்டத்தை விவசாயிகள் விரும்பவில்லை. இத்திட்டத்தை எதற்காகச் செயல்படுத்த வேண்டும்? 10,000 கோடி ரூபாய் திட்டம் என்பதால், கொண்டு வருகின்றனரா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 

மேலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக பயப்படுகிறது. தோல்வி பயத்தால் தேர்தலை நடத்தாமல் தள்ளிப் போடுகிறது. அமமுகவில் யாரோ சில நிர்வாகிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் செல்கின்றனர். அமமுக கட்சி தொண்டர்களின் இயக்கமாகும். எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது. கட்சி வலுவாக உள்ளது. நாங்கள் புதிய கட்சி, இப்போது தான் வளர்ந்து வருகிறோம். கட்சியைப் பதிவு செய்யும் நடைமுறை சென்று கொண்டிருக்கிறது.

 

நடிகர் சூர்யா நீட் தேர்வு குறித்து தெரிவிக்கும் கருத்து மாணவர்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், சமூக அக்கறையுடன் பேசி வருகிறார். அவரது கருத்துகளை விமர்சிப்பது அரசியல் நாகரிகமல்ல என்று தெரிவித்துள்ளார். கார்பன், மீத்தேன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், நீட் தேர்வு, 8 வழிச்சாலை என அனைத்து திட்டங்களும் மக்களும், விவசாயிகளும் விரும்பாத திட்டங்களாகும். ஆனால், இதைப்பற்றி பேசினால் அரசியல் ஆக்குகின்றனர். சமூக விரோதிகள் தூண்டி விடுகின்றனர் என அடக்கு முறையை ஆளும் தரப்பு கையாளுகின்றது. 

மக்களவைத் தேர்தலில் திமுக விபரீத ராஜயோகத்தால் வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கே அது தெரியும். திமுக எம்.பி.க்கள் தமிழகத்துக்காகச் செயல்பட வேண்டும். மேலும் தபால் துறை ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது'' என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.