தி.மு.க. ஜெயிச்சாலும் பரவாயில்லை... எடப்பாடி தோற்கணும்... தினகரனின் எசகுபிசகான இடைத்தேர்தல் ஃபார்மூலா..!
தினகரனின் கவனத்துக்கு கொண்டு சென்று வருத்தப்பட்ட போது, அவர் கூலாக ‘இடைத்தேர்தல் தொகுதிகளைப் பொறுத்தவரையில் நமக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் பணத்தை செலவு செய்வோம். மற்ற இடங்களில் கமுக்கமாக, தி.மு.க.வின் வெற்றிக்கு உதவிடுவோம். இந்த பதினெட்டு தொகுதியில் கணிசமானதில் நாம வென்றாலும் ஆட்சி அமைக்க முடியாது.
’நிரந்தர எதிரிக்கட்சி’...தி.மு.க.வை ஜெயலலிதா என்றென்றும் அடையாளப்படுத்தியது இப்படித்தான். அதேபோல், ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னே சசிகலாவும் ‘ஸ்டாலினை பார்த்து சிரித்த ஓ.பி.எஸ்.ஸை எப்படி நம்பிட முடியும்? நம்பிக்கை துரோகி’ என்று குற்றம்சாட்டிக் கிழித்தெறிந்தார். இப்படியாக A.D.M.K. என்றாலே அது Anti D.M.K. என்றுதான் பயின்று வந்திருந்திந்தனர்.
ஆனால், எந்த ஜெயலலிதாவின் படத்தை தன் கட்சி கொடியில் வைத்தும், எந்த ஜெயலலிதாவின் ‘அம்மா’ எனும் பட்டத்தை, தன் கட்சியின் பெயரில் வைத்தும் தனிக் கட்சி துவக்கி, தாறுமாறாக தமிழக அரசியலை அதிர வைத்துள்ளாரோ, அதே ஜெயலலிதாவின் வாழ்நாள் சித்தாந்ததுக்கு எதிராக செயல்படுகிறார் தினகரன் என்று பெரும் விமர்சனம் வெடித்துள்ளது.
என்ன பிரச்னை? என அரசியல் பார்வையாளர்களிடம் கேட்டபோது...”தமிழகத்தில் முப்பத்து ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல் மட்டுமல்லாது, பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரசாரம் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலினை பொறுத்தவரையில் மத்தியில் மோடி ஆட்சி மாறி ராகுலும், தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி மாறி தானும் பதவியில் அமர வேண்டும் எனும் வெறியில் உடைத்துக் கொண்டிருக்கிறார்.
எடப்பாடியும் விட்டேனா பார்! என்றுதான் உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் நடுவில் தினகரன் டீமும் பதினெட்டு தொகுதிகளிலும் களமாடி வருகிறது. இந்த மூன்று கட்சிகளுக்குமே நாடாளுமன்ற தேர்தலை விட, சட்டமன்ற இடை தேர்தலானது மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்நிலையில், ஏப்ரல் மூன்று தேதியாகிவிட்ட சூழலில் இந்த இடைத்தேர்தல் தொகுதிகளில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வெகுவாக பணத்தை அள்ளிக் கொட்டியும், தீ பிடித்ததுபோல் வேலைகளில் சுறுசுறுப்புக் காட்டியும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஈடான செலவையோ, உழைப்பையோ இங்கே அ.ம.மு.க.வினர் வழங்கவில்லை என்பதே அக்கட்சி நிர்வாகிகளின் வருத்தமாக உள்ளது.
இதை தினகரனின் கவனத்துக்கு கொண்டு சென்று வருத்தப்பட்ட போது, அவர் கூலாக ‘இடைத்தேர்தல் தொகுதிகளைப் பொறுத்தவரையில் நமக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் பணத்தை செலவு செய்வோம். மற்ற இடங்களில் கமுக்கமாக, தி.மு.க.வின் வெற்றிக்கு உதவிடுவோம். இந்த பதினெட்டு தொகுதியில் கணிசமானதில் நாம வென்றாலும் ஆட்சி அமைக்க முடியாது. ஆனால் பதினெட்டில் பெரும்பாலானவற்றில் அ.தி.மு.க. தோற்றால், ஆட்சி கவிழும், எடப்பாடி மற்றும் பன்னீரின் கொட்டம் அடங்கும், நிர்வாகிகள் உள்ளிட்ட அமைச்சர்கள் நம் பக்கம் ஓடி வருவார்கள். ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் நம் கைகளுக்கு வரும். அதுதான் தேவை.’ என்றாராம்.
இது அவரது கட்சியினரையே அதிர வைத்துள்ளது. காரணம், எந்த காலத்திலும் தி.மு.க.வின் வெற்றிக்கு சிறு புல்லாக கூட நாம காரணமாகிட கூடாதுன்னு நினைத்தார் ஜெயலலிதா. ஆனால், இன்னைக்கு தினகரனோ அ.தி.மு.க.வின் ஆட்சியை கவிழ்த்து தி.மு.க.வே ஆட்சிக்கு வர்றதுக்கு வழி பண்றார். இதெல்லாம் எங்கே போய் முடியுமோ!ன்னு புலம்புறாங்க.” என்கிறார்கள். தினகரனின் இந்த மூவ்களைப் பார்த்து அதிர்ந்து கிடக்கிறது அ.தி.மு.க. வட்டாரம். ஹும் தமிழக அரசியல் தனிச்சிறப்பு வாய்ந்ததுதான்!