சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் வெற்றி பெற்றால் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும், திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பரிசு பெட்டி சின்னத்தில், எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. இதனையடுத்து தினகரன் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், நாகை மக்களவை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செங்கொடியை ஆதரித்து டிடிவி.தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கன்னியாகுமாரி உள்ளிட்ட சில தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்துவதற்கு பாஜக தூது அனுப்பியது உண்மை தான் என டிடிவி தினகரன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய மக்கள் விரோத ஆட்சியையும், மோடியின் ஆட்சி யையும் முடிவுக்குக் கொண்டு வர நாங்கள் காரணமாக இருப்போம் என்றார். 

மேலும் பேசிய அவர், இடைதேர்தலில் அமமுக வெற்றிப்பெற்றால் திமுக மற்றும அதிமுக ஆதரவு அளிக்காது. சட்டமன்ற தேர்தலில் அமமுக வெற்றிப்பெற்றால் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். மக்கள் நல கூட்டணியில் இருந்தபோது, திமுகவை விமர்சித்த கம்யூனிஸ்டுகள், தற்போது 2 சீட்டுக்காக அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளதாக டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.