மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி நடந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்  மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார்.

 

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’நாங்கள் போட்ட ஓட்டு எங்கே போனது என்று மக்கள் எங்களிடமே கேட்கிறார்கள். எங்கள் ஏரியா மக்கள் என்னிடமே இதை கேட்டார்கள். ஒரு நாள் இப்படித்தான், நான் நடைபயிற்சி செல்லும்போது அப்பகுதி மக்கள் சிலர் என்னை பார்த்து விட்டு, "நான் உங்களுக்கு தான் சார் ஓட்டு போட்டேன். ஆனால் நம்ம பூத்திலேயே,16 ஓட்டுதான் விழுந்துள்ளது. இது எப்படி?" என்று கேட்கிறார்கள்.

எங்களுக்கு விழுந்திருக்க வேண்டிய சதவீத ஓட்டுகள் எவ்வளவு? விழுந்திருப்பது எத்தனை என்பதையும் நாங்கள் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறோம். நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்தால் ஆதாரம் இல்லை என்று தள்ளுபடி ஆகும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். வாக்குச் சீட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை விட வாக்குச்சீட்டு முறைதான் சிறப்பானது. 

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறைதான் பின்பற்றப்படுகிறது. என்ன இருந்தாலும் இது வெறும் மெஷின் தானே. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த ஆதாரங்களை திரட்டி கொண்டு அனைத்து கட்சிகள் ஆதரவையும் பெற்று, வாக்கு பதிவு இயந்திரம் முறையை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்குரிய ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டு இருக்கிறோம். கருணாநிதி ராஜினாமா செய்யவில்லையே கடந்த மக்களவை தேர்தலில், திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அதற்காக கருணாநிதி திமுக தலைவர் பதவியை ராஜினாமா செய்தாரா? அதுபோல அமமுக நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. சட்டசபையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு அன்று எங்களது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள். அப்போதுதான், எங்களது ஸ்லீப்பர் செல் யார் என்பது உங்களுக்கு தெரியவரும். மக்கள் விரும்பும் தலைவராக மோடி விளங்குவதாக, ரஜினிகாந்த் கூறியுள்ளது அவரது சொந்த கருத்து. அதற்கு நான் பதில் அளிக்க முடியாது. என்னை பொறுத்த அளவில் இது ஓட்டு மெஷினுக்கு கிடைத்த வெற்றி’’ என அவர் தெரிவித்துள்ளார். 

முதலில் திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என டி,டி.வி தெரிவித்து வந்தது. இப்போது ஸ்லீப்பர் செல்கள் துணையுடன் இந்த ஆட்சியை கலைக்கப்போவதாக தெரிவித்துள்ளார் டி.டி.வி.தினகரன்.