நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் படுதோல்விக்கு பிறகு தமிழக அரசியலில் ஓரங்கப்பட்ட ஒரு தலைவராகிவிட்டார் டிடிவி தினகரன். வலது கரமாக செயல்பட்டு வந்த தங்கதமிழ்ச் செல்வன் திமுகவில் இணைந்தது அமமுக நிர்வாகிகளை யோசிக்க வைத்தது. இதனை தொடர்ந்து தினகரனின் இடதுகரமாக செயல்பட்டு வந்த புகழேந்தியும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதே போல் மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் தினந்தோறும் அதிமுக அல்லது திமுகவில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இப்படி வேறு கட்சிக்கு செல்பவர்களை கண்காணிக்க தனது ஐடி டீமை தினகரன் பயன்படுத்தி வருகிறார். மாவட்டச் செயலாளர் நிலையில் இருப்பவர்களை இந்த டீம் தொடர்ந்து கண்காணிக்கிறது. அப்படி கண்காணிக்கப்பட்ட போது சிக்கியவர் தான் புகழேந்தி என்கிறார்கள்.

வேறு கட்சிக்கு செல்பவர்களை தடுக்க முடியாது, ஆனால் ஒருவர் இன்னொரு கட்சிக்கு சென்று நல்ல பதவியை பெற்றுவிட்டால் வேறு சிலரும் இதே பாணியில் அந்த கட்சிக்கு தாவ முயற்சிக்கின்றனர். இதற்கு ஒரே வழி கட்சி மாறுபவர்களை அம்பலப்படுத்தி மற்ற கட்சியில் அவர்கள் பேரம் பேசுவதற்கான வாய்ப்பை குறைப்பது தான் என்று கருதுகிறது தினகரன் டீம். இதனால் தான் தங்கதமிழ்ச் செல்வன் பேசிய ஆபாச பேச்சுகள் தொடர்பான ஆடியோவை டிடிவி ஐடி விங்க் லீக் செய்தது.

இந்த ஆடியோ வெளியான உடன் தங்கதமிழ்ச் செல்வன் பதறினார். காரணம் அவர் திமுக தரப்பில் அப்போது பேரம் பேசிக் கொண்டிருந்தார். தினகரனுடன் கருத்து வேறுபாடு அங்கு இருக்க முடியாது என்கிற தகவல் தெரிந்தால் பேரத்த்தை அடித்து பேச முடியாது என்று தங்கதமிழ்ச் செல்வன் கருதியது தான் இதற்கு காரணம். இதே போல் தான் தற்போது புகழேந்தி வீடியோவையும் அமமுக ஐடி டீம் லீக் செய்துள்ளது. இது குறித்து புகழேந்தி பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.

புகழேந்தி வேறு கட்சிக்கு செல்லும் மனநிலையில் இருப்பதை அம்பலப்படுத்தியது மூலம் திமுக தரப்பில் அவரது பேர வாய்ப்பு குறைந்து போயிருக்கும் என்பது தான் தினகரன் வியூகம். அதன்படியே ஏற்கனவே அங்கு ஒதுக்கப்பட்ட புகழேந்திக்கு நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று திமுக தரப்பில் பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளன. இதனால் புகழேந்தி திமுகவில் இணைந்தாலும் பெரிய பதவிகள் கிடைக்காது என்கிறார்கள். எல்லாம் டிடிவியின் தில்லாலங்கடி அரசியல் தான் காரணம்.