எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து, ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தங்களை சந்தித்து பேசாவிட்டால் நாளை நாங்கள் அனைவரும் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடப்போவதாக டி.டி.வி ஆதரவாளர்  தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து, சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து  நீக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த தினகரன் ஆதரவாளர்கள்,  ஆளுநர்  வித்யா சாகர் ராவை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  மீது நம்பிக்கை இல்லை என்றும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தனித்தனியாக கடிதம் அளித்தனர்.

இதையடுத்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தற்போது புதுச்சேரியில் தங்கியுள்ளனளர்.

இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய, தங்க தமிழ் செல்வன், எம்எல்ஏ, எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து, ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தங்களை சந்தித்து பேசாவிட்டால் நாளை நாங்கள் அனைவரும் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடப்போவதாக கூறினார்.

இந்நிலையில் இன்று டி.டி.வி. தினகரன் புதுச்சேரி வந்து அவரது ஆதரவு எம்எல்ஏக்களை சந்திக்க உள்ளதாகவும் தங்க தமிழ் செல்வன் தெரிவித்தார்.

மேலும் தேர்தல் ஆணையத்தில் அளித்த பிரமாணப் பத்திரங்களை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் வாபஸ் பெற்றால், நீதிமன்றம் செல்வோம். எனவும் அவர் தெரிவித்தார்