இறுதித்தீர்ப்பு வர இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில், டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு உச்சநீதி மன்றத்தீர்ப்பில்  குக்கர் சின்னம் வழங்காதது மட்டுமின்றி பொதுச்சின்னம் கிடைக்கும் வாய்ப்பும் மங்கியுள்ளதால் அக்கட்சி ஆதரவாளர்கள் பயங்கர அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

சற்றுமுன்னர் வழங்கப்பட்ட உச்ச நீதி மன்றத் தீர்ப்பில் அ.ம.ம.க ஒரு கட்சியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் கட்சிக்கு குக்கர் சின்னம் மறுக்கப்பட்டது, அதே காரணத்துக்காக அக்கட்சிக்கு பொதுச் சின்னம் கிடைக்கும் வாய்ப்பும் மங்கியுள்ளது.

அப்படி பொதுச்சின்னமும் மறுக்கப்படும் பட்சத்தில் இக்கட்சியின் சார்பில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் 40 பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர்களும் இடைத்தேர்தலில் போட்டியுடும் 18 சட்டமன்ற வேட்பாளர்களும் தனித்தனி சின்னங்களில் போட்டியிடும் குழப்பமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆக இந்த இரு தேர்தல்களுக்கும் சேர்த்து அ.ம.ம.கவுக்கு மொத்தம் 59 தொகுதிகளுக்கு 59 சின்னங்கள். வேட்பாளர்களும் வாக்காளர்களும் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டிய நிலை.

அ.ம.ம.க.வின் தேர்தல் வெற்றிவாய்ப்பு ஏற்கனவே பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தினகரனின் ஆதரவாளர்கள் அனைவரும் பயங்கர அப் செட் ஆகியுள்ளனர். ’கட்சியையாவது முறைப்படி பதிவு செஞ்சிருந்தா குக்கர் சின்னம் கிடைக்காட்டியும் அட்லீஸ்ட் பொதுச்சின்னமாவது கிடைச்ச்சிருக்குமே’ என்று புலம்பி வருகிறார்கள்.