டிடிவி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீது அரசு கொறடா வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். கட்சி விரோத செயலில் ஈடுபட்டதால் 3 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் மே 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதில் மொத்தம் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றால் திமுக ஆட்சியை கைப்பற்றிவிடும். 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் அதிமுகவும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என உள்ளது. 

இந்நிலையில் இன்று காலை தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சட்டமன்றத்தில் இப்போது அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு ஆதரவாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருதாச்சலம் கலைச்செல்வன் மற்றும் கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேர் செயல்படுகின்றனர். இவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படலாம் என்ற தகவல் வெளியாகின. 

இந்நிலையில் 3 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறாடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். இவர்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகவும், கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாகவும் புகைப்படம், வீடியோ ஆதாரங்களுடன் சபாநாயகர் தனபாலிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து, டிடிவி. தினகரன் எம்எல்ஏக்கள் மூன்று பேருக்கும் விளக்கம் கேட்டு சபநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளார். நோட்டீஸ் அனுப்பப்படும் பட்சத்தில், அதனை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து, 15 நாட்களுக்குள், மூன்று பேரும் விளக்கம் அளிக்க வேண்டும்.

 

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக கொறடா ராஜேந்திரன் அதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, கலைச்செல்வன், ரத்னசபாபதி ஆகியோர் மீது உரிய ஆதாரங்களுடன் சபாநாயகரிடம் வழங்கியுள்ளோம். அதன் அடிப்படையில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார். தினகரனுடன் தொடர்பில் இருந்து வீடியோ, புகைப்பட ஆதாரமும் வழங்கியுள்ளேன் என கூறியுள்ளார்.