எடப்பாடியார் அணிக்கு எதிராக ஓ.பி.எஸ். தர்மயுத்தம் (!?) நடத்தியபோது, அவருடன் இணைந்து நின்றவர் மாஜி வேளாண்மைத்துறை அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன். அதிர்ந்து பேசாதவர், ஆனால் ஜெ.,வின் தெளிவான விசுவாசி. பன்னீர் அணியிலிருக்கும்போது மேற்கு தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ’முப்பது வருஷமா அம்மாவுக்கு சேவை பண்ணி காப்பாத்தினேன்னு சொல்லிட்டு திரியுற சசிகலா, அந்த சேவையை தொடர்றதுக்காக அம்மா கூடவே மேலேயும் போயிருக்கலாமே!?’ என்று ஒரு பகீர் விமர்சன குண்டை தூக்கிப் போட்டார். 

சசிகலா, தினகரன் அணியை மட்டுமில்லாது எடப்பாடியார் அணியினரை கூட அதிரவைத்த விமர்சனம் அது. ஆனால் மேடையில் அவர் அப்படி பேசிவிட்டு வந்ததும், கைகொடுத்துப் பாராட்டினாராம் பன்னீர்செல்வம். 

அப்புறம் அணிகள் இணைந்து, ஓ.பி.எஸ். துணைமுதல்வராகிவிட்டார். முனுசாமி, மாஃபா.பாண்டியராஜன் தவிர தன் சகாக்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். அதில் தாமோதரனும் ஒருவர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தாமு இதோ திருச்சியில் தினகரன் அணியில் இணைந்துவிட்டார். 

‘சின்னம்மாவை ரொம்ப மோசமா பேசுன இவரை கட்சியில சேர்க்கக்கூடாதுண்ணே!’ என்று அ.ம.மு.க.வின் நிர்வாகிகள் கடுப்பாய் தடைபோட்டபோது, ’உணர்ச்சி வேகத்துல பேசிட்டார். மறப்போம் விடுங்க.’ என்று இவரை மன்னித்து ஏற்றுக் கொண்டார் தினகரன். 

தாமோதரன் அணி தாவிவிட்டதால் அ.தி.மு.க.வுக்கு நாலு ஓட்டு கூட இழப்பு இல்லை! என்று கோயமுத்தூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் சிலர் கொக்கரிக்கிறார்களாம். ஆனால் இதில் யதார்த்தம் இருக்கிறது என்பது தினகரனுக்கும் தெரியும். காரணம், தாமோதரன் ஒன்றும் பெரிய தொண்டர் படையை கொண்ட தலைவர் இல்லை. 

ஆனால் தினாவோ தாமுவிடமிருந்து எதிர்பார்ப்பது வேறொன்று. அதாவது தர்மயுத்தம் நடத்தியபோது பன்னீர் பேசிய ரகசியங்கள், அவர் போட்ட திட்டங்கள், எடப்பாடியாருக்கு செக் வைப்பதற்காக பன்னீர் அணி செய்த காய் நகர்த்தல்கள், தர்மயுத்தம் நடத்த பயன்படுத்திய நிதி ஆதாரம்! ஆகியவற்றையும், துணைமுதல்வர் ஆன பிறகு பன்னீர்செல்வத்தின் நிதி ஆதாரம் அதிகரித்துள்ளதா? அவரது மகன்களின் சொத்து விபரங்களென்னென்ன? என்பன போன்ற தகவல்களை தாமோதரனிடமிருந்து உறிஞ்சி எடுத்துவிடும் முடிவிலிருக்கிறார் தினா. 

கிடைக்கும் தகவல்களுக்கான ஆதாரங்களையும் திரட்டி, அப்படியே மக்கள் மன்றத்தில் போட்டுடைத்து பன்னீருக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை கொடுக்கும் முடிவில் இருக்கிறார் தினகரன்! என்கிறார்கள். தாமு தரப்போகும் தகவல்கள் பன்னீர்செல்வத்தை தலை சுற்ற வைக்கலாம்...என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.
ஆனால் அது பலிக்குமா? கவனிப்போம்!