தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது என கூறும் மத்திய அரசு  இந்த ஆட்சி  தொடர அனுமதிப்பது ஏன் என பாஜக அரசுக்கு டிடிவி தினகரன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக விழாவில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில், ஒரு  ஓட்டுக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் அதிமுக டெபாசிட் வாங்காது  என்றும் தற்போது அதிமுக  அரசு ஆயுட்காலத்தை நீடிப்பதற்காக  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறது என கிண்டல் செய்தார்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க  வாக்கெடுப்பு நடத்தினால்  ஸீலீப்பர்  செல்கள் வெளியே வருவார்கள் என்றும் தினகரன் கூறினார்.

தமிழகத்தில் முட்டையில் மட்டும் அல்ல அனைத்துதுறைகளிலும்  ஊழல் நடைபெற்று வருகிறது.  வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றகழகம் வெற்றிபெறும்.அதேபோல் சட்டமன்ற தேர்தலில்  200தொகுதிகளை கைப்பற்றுவோம் என்றும் தினகரன் குறிப்பிட்டார்.

மத்தியில் யார் பிரதமர் என தீர்மானிக்கும் கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமையும் என்று தெரிவித்த டி.டி.வி.தினகரன், தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருவதாக பாஜக தலைவர் அமித்ஷா கூறியதை சுட்டிக்காட்டிய தினகரன், அப்புறம் ஏன் இந்த ஆட்சி தொடர்வதை மத்திய அரசு அனுமதிக்குது என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் திராவிட கட்சிகள் தவிர வேறு யாரும் ஆட்சி அமைக்கமுடியாது  என்றும் பாஜகவின் கனவு தமிழ்நாட்டில் பலிக்காது என்றும் அவர் கூறினார்.

கோவையில் கல்லூரியில் நடந்த விபத்தில்  உயிரிழந்ந மாணவியின் பெற்றோர்கள் மீது வேண்டுமானாலும் காவல்துறை  வழக்கு தொடரும்  ஆனால் கல்வி நிறுவனத்தின் மீது தமிழக அரசு  வழக்கு  தொடராது என டி.டி.வி.தினகரன் கலாய்த்தார்