ஒரு வகையில் ஆச்சரியமான கட்சிதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். தினகரன் தவிர முக்கிய முகங்கள் பத்து கூட தேறாது இந்த கட்சியில். ஆனாலும் தினம் தினம் லைம் லைட்டில் தங்களையும், தங்கள் கட்சியையும் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு அடுத்து இந்த கட்சிக்குதான் மீடியாக்களும், பத்திரிக்கைகளும் மிக மிகுந்த முக்கியத்துவத்தை அளித்துக் கொண்டே இருக்கின்றன. திட்டமிட்டு செய்கிறார்களா? அல்லது தானாகவே நடக்கிறதா என்று புரிவதில்லை. ஆனால் தொடர்ந்து தங்களை பரபரப்பின் மையப்புள்ளியாக வைத்திருப்பதில்தான் வெற்றி பெறுகிறது தினகரனின் அரசியல். 

அந்த வகையில் கடந்த சில நாட்களாக அ.ம.மு.க.வை மையப்படுத்தி ஓடியது ‘செந்தில்பாலாஜி தி.மு.க.வுக்கு தாவுகிறார்’ எனும் செய்திதான். வெறும் வாட்ஸ் அப் ஷேரிங்காக கடந்த வெள்ளிக்கிழமையன்று ஓட துவங்கிய இந்த விஷயம், நேற்றெல்லாம் பெரும் பரபரப்பாகி இன்று தினசரி பத்திரிக்கையில் பெரிய செய்தியாக டீல் செய்யப்படுமளவுக்கு பெரிதானதுதான் ஹைலைட்டே.  

ஜெ., மரணத்துக்குப் பிறகு நடந்த களேபரத்தில் சசிகலாவின் தலைமையேற்ற செந்தில் பாலாஜி, அவர் சிறை சென்றதும் தினகரனின் விசுவாசியானார். அ.ம.மு.க.வில் மாநில அமைப்பு செயலாளர், கரூர் மாவட்ட செயலாளர் எனும் முக்கிய பொறுப்புகளை வகிக்கிறார் செந்தில். இவருக்குள்ள மிகப்பெரிய எரிச்சலே சொந்த மாவட்ட அ.தி.மு.க.வில் வலம் வரும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தம்பிதுரை எம்.பி. இருவரும்தான். இவர்களை மட்டம் தட்டிட எந்தளவுக்கு அரசியல் செய்ய வேண்டுமோ அதை தெளிவாய் செய்து கொண்டிருக்கிறார்.

 

இதற்கு தினகரனின் ஆசியும் முழுவதுமாய் இருக்கிறது. இந்நிலையில், கடந்த பத்து நாட்களாய் தினகரன் - செந்தில் இடையில் ஏதோ ஒரு புகைச்சல் ஓடிக் கொண்டிருக்கிறது என்று அ.ம.மு.க.வின் மேல் மட்டத்தில் ஒரு தகவல். அதாவது செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட முக்கிய விஷயத்தில் தன்னிச்சையாக  முடிவுகளை எடுப்பதாகவும், இதனாலேயே இருவருக்குள்ளும் மனத்தாங்கல்! என்றும் செய்திகள் பரவின. 

இது அடுத்த நாளைந்து நாட்களில் கரூர் மாவட்ட அனைத்துக் கட்சியினர் அளவுக்கு பரவியது. செய்தியாளர்கள் இதுபற்றி செந்தில்பாலாஜியிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார். இது தினகரன் மற்றும் செந்தில் பாலாஜி இருவருக்கும் இடையில் பிரச்னை இருப்பதை உறுதி செய்கிறது! என்றனர் அரசியல் விமர்சகர்கள். 

இந்நிலையில்தான் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஃபேஸ்புக் போன்ற சோஸியல் மீடியாக்களில் ‘அ.ம.மு.க.விலிருந்து விலகி, தி.மு.க.வில் இணைகிறார் செந்தில்பாலாஜி. அவருக்கு அதிகப்படியான செல்வாக்கு மற்றும் அரசியல் கூர்மை இருப்பதால் அரவக்குறிச்சி தொகுதியில் அவரை வேட்பாளராக்குகிறது தி.மு.க.’ என்றெல்லாம் கொளுத்திப் போட்டனர். பெரும் பரபரப்பு ஓட துவங்கியது. இதை மேலும் வீரியமாக்கும் விதமாக நேற்று (ஞாயிறு) மாலையில் கரூரில் தனது அலுவலகத்தில் தன் ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து திடீர் ஆலோசனையை நடத்தினார் செந்தில். இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி கட்சி மாறப்போவது உறுதி!  உறுதி! என்று பேசத்துவங்கினர். 

இந்த சூழ்நிலையில்தான் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக இன்று தினகரனை செந்தில் பாலாஜி சந்தித்த புகைப்படம் வெளியாகி மேட்டரை திசை திருப்பியிருக்கிறது. வழக்கமான வேட்டி சட்டையில் இல்லாமல் தினகரனும், செந்தில் பாலாஜியும் கலர் பேண்ட் ஷர்ட்டில் இருக்கிறார்கள். அதிலும் செந்தில் ஏதோ புது மாப்பிள்ளை தோரணையில் இருக்கிறார் கூலாக. தினகரன் சிரித்தாலும் கூட, அவரது முகத்திலிருக்கும் ஷேவ் செய்யப்படாத தாடியானது, தனது ஆத்மார்த்த குரு மூக்குபொடி சித்தரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதை விளக்குகிறது. 

ஆக செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு போகிறார்! எனும் பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டாலும் கூட, ‘ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது. இல்லாமலெல்லாம் இப்படியான தகவல்கள் கிளம்பாது.’ என்று இப்போதும் அடித்துச் சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதே வேளையில் கரூர் அ.தி.மு.க.வினரோ “செந்தில் பாலாஜி மிகப்பெரிய நடிகர். தன்னைப் பற்றி பரபரப்பு வேண்டும் என்பதற்காக அவரே கூட கிளப்பிவிட்டிருப்பார் இப்படியான தகவலை. அப்படியில்லை என்றால் அன்றைக்கு செய்தியாளர்கள் இதுபற்றி கேட்டபோதே மறுத்து சொல்லியிருக்க வேண்டிதானே! வளர விட்ட போதே தெரியவில்லையா, இது திட்டமிடப்பட்ட நாடகம் என்று!” என்கிறார்கள். ம்ம்ம்முடியல.....!