டி.டி.வி.தினகரன் தற்போது தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு என்ற பயண நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளார். அவர் எங்கு சென்றாலும் பல்லாயிரக்கணக்கில் பொது மக்களும் தொண்டர்களும் கூடுகிறார்கள். இது அதிமுகவினரிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் அவர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில்  நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.எல்.ஏக்களுக்கான தீர்ப்பு சாதகமாக வரும் என நினைத்தோம். ஆனால் சாதகமாக வரவில்லை. ஆனாலும் மக்கள் வழங்கும் தீர்ப்பாக நாடாளுமன்ற தேர்தலும், அதன்பின் 20 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் வரவுள்ளது. 

,டைஙத தேர்தலில் எட்டு தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி அணி வெற்றி பெறாவிட்டால் இந்த ஆட்சி தானாகவே முடிவுக்கு வந்துவிடும். இவர்களால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது. ஏனென்றால் ஆட்சி மீது மக்கள் அவ்வளவு வெறுப்புடன் உள்ளனர்.

ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பதால் தான் கூட்டணி அமைத்தாலாவது தலை தப்பிக்கும் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்:. ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகும் அனைவருமே பூஜ்யமாகப் போகிறார்கள் என தெரிவித்தார்.

எத்தனை கட்சிகளை கூட்டணியில் சேர்த்தாலும் இவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். கூட்டணியில் சேருவோருக்கும் டெபாசிட் கிடைப்பதே கடினம் என அவர் கடுமையாக பேசினார்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நியாயமாக ஊதிய உயர்வு கேட்டால் நிதியில்லை என்கிறார்கள். ஆனால், எம்.எல்.ஏக்கள் கேட்காமலேயே இரண்டு மடங்கு ஊதிய உயர்வு வழங்குகிறார்கள் என்றும் டி.டி.வி.தினகரன் கிண்டல் செய்தார்.