திமுகவின் இரு அணிகளும் இணைந்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்த தினகரனுக்கு, அந்த முயற்சியில் தோல்வியே மிஞ்சியது.

அடுத்து, சசிகலா குடும்பத்தின் அரசியல் செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், என்று அவரது உறவினர்களே தினகரனை தூற்ற ஆரம்பித்து விட்டனர்.

இதனால் வெறுத்து போன தினகரன், கட்சியும், ஆட்சியும் கைவிட்டு போகும் நிலையில், தம்மை எதிர்த்து, அமைய போகும் ஆட்சியை கவிழ்த்தால் என்ன? என்று மாற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

எடப்பாடியை முதல்வர் ஆக்கும் போது, 122 எம்.எல்.ஏ க்கள் தினகரன் கட்டுப்பாட்டில் இருந்தனர். தற்போது, பன்னீர் அணியும் இணைந்தால், கட்சியின் பலம் 133 ஆக உயர்ந்து விடும்.

ஏற்கனவே, 6 எம்.எல்.ஏ க்களை இழுத்தால், சசிகலா  தரப்பால் ஆட்சி அமைக்க முடியாமல் போகும் என்று, அதற்காக பன்னீர் தரப்பு காய் நகர்த்தியது.

அது போல, 133 எம்.எல்.ஏ க்களில், ஒரு 16 எம்.எல்.ஏ க்களை இழுத்து விட்டால், ஆட்சியையே கவிழ்த்து விடலாம் என்று தினகரன் யோசிப்பதாக கூறப்படுகிறது. 

ஜெயலலிதாவுக்கு நெருக்கடி வந்தபோது, முதல்வராக கொண்டுவந்த பன்னீரும்,  சசிகலாவுக்கு நெருக்கடி வந்தபோது, முதல்வர் ஆக்கிய எடப்பாடியும் துரோகம் செய்து விட்டனர்.

அதனால், துரோகத்தால் வீழ்ந்தவர்களின் மன வலியை, பன்னீரும், எடப்பாடியும் உணரும் வகையில், ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தினகரன் துடித்து வருகிறார்.

அதற்காக, என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை. 16 எம்.எல்.ஏ க்களை இழுத்து விட வேண்டும் என்று தமது ஆதரவாளர்களுக்கு தினகரன்  உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவரது முயற்சி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.