ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் சேர்ந்தால்தான் இந்த ஆட்சியை காப்பாற்ற முடியும் என சூலூர் எம்எல்ஏ கருத்து தெரிவித்ததால் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சூலூர் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கனகராஜ். அதிமுகவில் இருந்து வரும் எம்.எல்.ஏ. கனகராஜ், சென்னை, ஆர்.கே.நகரில்  இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு வாழ்த்து கூறியிருந்தார். இது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜெயலலிதா ஆட்சி நிலைக்க எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்ந்து தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ. கனகராஜ் அப்போதிருந்தே வலியுறுத்தி வந்தார். 

ஜெயலலிதாவுக்கு கொடுத்த அதே மரியாதையை தினகரனுக்கும் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்- தினகரன் மூவரும் இணைய வேண்டும் என்று பல்வேறு நிலைகளில், கோரிக்கை விடுத்த நிலையில். மூவரும் இணைவது விரைவில் நடக்கும் என்றும் கனகராஜ் கூறினார். அது மட்டுமல்லாமல் தினகரன் - இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். தலைமையில்தான் கட்சி, ஆட்சி இயங்க வேண்டும் என்றும் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமமுகவின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். திகார் சிறையில் வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்தித்தார். கடந்த ஆண்டு ஓபிஎஸ் என்னை சந்தித்தது எனது நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். இந்த சந்திப்பின்போது தர்மயுத்தம் என்று கூறி நான் நடந்து கொண்டவிதம் தவறு என்று கூறி மன்னிப்பு கேட்டதாக கூறினார்.

  

முன்னதாக எடப்பாடி ஆட்சியை கலைப்பது தொடர்பாக, டிடிவி தினகரனை சந்தித்துப்பேச, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் நேரம் கேட்டதாக, தங்க.தமிழ்ச்செல்வன் அண்மையில் கூறியிருந்தார். இது குறித்து, ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களை சந்தித்தபோது, தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டியை நான் பார்க்கவில்லை. அதனை பார்த்துவிட்டு சென்னையில் நான் விரிவாகப் பேட்டியளிக்கிறேன் என்றார்.  தினகரனை சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு, அது கடந்த காலம் என்று பதிலளித்தார் பன்னீர்செல்வம். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நான் திகார் சிறையிலிருந்து வந்தபிறகு, ஓ.பன்னீர்செல்வம் என்னை பார்க்க வேண்டும் என்று நண்பர் மூலம் சொல்லி அனுப்பினார். என்னுடைய ஆதரவாளர்கள் வலியுறுத்தியதால், நான் பன்னீரை சந்தித்தேன். அப்போது, நான் பேசியதெல்லாம் தவறு, அவசரப்பட்டுவிட்டேன். என் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நிர்வாகிகளுடன் கலந்து பேசிவிட்டு இணைந்துகொள்வோம். இணைந்து எடப்பாடியை எதிர்ப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் தெரிவித்ததாக டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாக டிடிவி தினகரன் கூறியிருப்பது தொண்டர்களாகிய எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உற்சாகமாக இருக்கிறது என்றும் அவர்கள் சேர்ந்தால்தான் இந்த ஆட்சியைக் காப்பாற்ற முடியும் என்றும் சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் குறித்து டிடிவி தினகரன் கூறியுள்ளதற்கு அதிமுக தரப்பில் இருந்து பல்வேறு எதிர் கருத்துக்கள் வந்தவண்ணம் இருக்கையில், எடப்பாடி ஆதரவாளரான சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் இவ்வாறு கூறியுள்ளது அதிமுக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.