சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிப்பது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் விமர்சனம் செய்துள்ளார். 

முன்னதாக டிடிவி. தினகரனின் அமமுக கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருதாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆதாரத்துடன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து 3 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனையடுத்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சட்டப்பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகியின் இல்லத் திருமணவிழாவில் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சபாநாயகர் தனபால் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார். ஏற்கெனவே இரண்டு முறை இதுபோல் தீர்மானங்கள் கொண்டு வந்து அதில் தோல்வியுற்றுள்ளார். எங்களது கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது எங்களது உள்கட்சி விவகாரம். இதில் ஸ்டாலின் தலையிட தேவையில்லை.

இதன்மூலம் ஒன்று தெளிவாக தெரிகிறது டிடிவி. தினகரனுடனும், ஸ்டாலினும் கூட்டு சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சி செய்கின்றனர்.  ஆனால் அவரது முயற்சி பயனளிக்காது என்றார்.