தமிழக சட்டப்பேரவை இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று தொடங்கிய போது டிடிவி.தினகரனும்- எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் எழுந்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து பேச வாய்ப்பளிக்குமாறு கோரினார். ஆனால், ஆளுநர் மறுக்கவே, திமுக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்;- குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேச அனுமதிக்காததால் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக ஆளுநர் உரையால் நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. 7 பேர் விடுதலைக்கு ஆளுநர் இதுவரை பதில் அளிக்கவில்லை. தமிழகத்தில் வேலைவாய்ப்பு, வளர்ச்சி இல்லை. தமிழகத்தின் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

அடுத்து பேட்டி கொடுப்பதற்காக அமமுக பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான டிடிவி.தினகரன் காத்திருந்தார். அப்போது, பேட்டி கொடுத்துவிட்டு சட்டப்பேரவை உள்ளே செல்வதற்காக மு.க.ஸ்டாலின் கிளம்பிய போது எதிரே வந்த டிடிவி.தினகரன் எதிர்க்கட்சி தலைவருக்கு வணக்கம் தெரிவித்து, புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட்ட போது தேர்தலைக் கண்டு ஆளுங்கட்சி பயப்படுவது போல பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் பயப்படுகிறது என டிடிவி.தினகரன் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் பெங்களூரு சிறையில் சசிகலா இருப்பதற்காக அவர் பயப்படலாம். நேர்த்திக்கடன் போன்று வாரம்தோறும் பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்திப்பவர் தினகரன். இன்னும் சொல்லப்போனால் அவரை ஆர்.கே.நகரில் எம்.எல்.ஏ தினகரன் என்று யாரும் அழைக்கவில்லை. 20 ரூபாய் டோக்கன் தினகரன் என்றுதான் அழைக்கின்றனர் என கடுமையாக விமர்சித்தார். இதற்கு கடுப்பான தினகரன் திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம்பர்யத்திலிருந்து வந்தவர் என ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.