கட்சிக்கு விரோதமாக தங்க தமிழ் செல்வன் பேசியது  குறித்து முடிவு எடுக்க அமமுகவின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அடையாரில் உள்ள அவரது விட்டில் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் தற்போது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதிமுக இரண்டாக உடைந்தபோது அக்கட்சியின் பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரனுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்க தமிழ் செல்வன். முதலில் அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து கடந்த சில நாட்களாகவே அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் நெல்லை, கோவை மாவட்ட அமமுக செயலாளர்களை நீக்க வேண்டும் என பேட்டி கொடுத்தார் தங்க தமிழ் செல்வன்.

இதனால் கோபமடைந்த தினகரன், அவர் பெரிய ஜாம்பாவன் என்றால் கட்சியை விட்டு போகச் சொல்லுங்கள் என தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த பேசிசு தங்க தமிழ் செல்வனை மேலும் கோபப்படுத்தியது.

இதையடுத்து டி.டி.வி.தினகரனை அவரது உதவியாளர் ஜனாவிடம் தங்க தமிழ் செல்வன் மிகக் கடுமையாக பேசியுள்ளார். இது தொடர்பான ஆடியோ நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் ஆடியோவில் உள்ளது உங்கள் குரல்தானா ? நீங்கள்தான் அப்படி பேசினீர்களா ? என செய்தியாளர்கள் தங்கதமிழ் செல்வனிடம் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர், அது தன்னுடைய குரல்தான் என்றும், அதைப் பேசியது தான் தான் என்றும் கூறினார்.

அமமுகவின் நன்மைக்காக பல ஆலோசனைகளை தான் கூறினாலும், டி.டி.வி.தினகரன் அதை செல்படுத்துவதில்லை என்றும் தொடர்ந்து தான் புறக்கணிக்கப்பட்டதால் தான் அப்படி பேசியதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தைரியம் இருந்தால் என்னை அமமுகவைவிட்டு நீக்குங்கள் எனவும் சவால் விடுத்தார். 

இந்நிலையில் தங்கத் தமிழ்செல்வன் குறித்து முடிவு செய்ய தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டி.டி.வி, தினகரன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தின் முடிவில் தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது.