முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், டிடிவி தினகரன் இன்று பெங்களூரு சென்று, சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்தித்து  அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. 

அதிமுக அம்மா அணி இரண்டாக உடைந்து எடப்பாடி மற்றும் டி.டி.வி.தினகரன் என 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரை அதிமுகவிற்குள் சேர்க்கக்கூடாது என அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

மேலும், அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைவதற்கு விதிக்கப்பட்ட, 60 நாட்கள் கெடு, ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் நிறைவடைவதாலும், நிர்வாகிகளை சந்திக்க தினகரன் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணம் குறித்தும், சசிகலாவுடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை தினகரன் எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனைக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் பல நடவடிக்கைகள் எடுக்கப் படும் என டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.