டிடிவி தினகரனை ஓரம் கட்ட சசிகலா முடிவு செய்திருந்த நிலையில் முந்திக்கொண்டு சசிகலாவை தினகரன் ஓரம் கட்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு யாரும் எதிர்பாராத வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி தான் பறிக்கப்பட்டதாக அனைவரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சசிகலாவை தினகரன் கட்சியில் இருந்து நீக்கி விட்டார் என்பதுதான் யாருக்கும் தெரியாத ஒரு தகவல். அதிமுகவிற்கு உரிமை கோரி சசிகலா வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதால் அதற்கு வசதியாக அவருடைய பதவி பறிக்கப் பட்டதாக தினகரன் தரப்பு கூறிவந்த நிலையில் கட்சியிலிருந்தே அவர் நீக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

இதற்கான காரணம் என்ன என்று விசாரித்தபோது நாடாளுமன்றத் தேர்தலில் தினகரனின் நிலைப்பாட்டை சசிகலாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்கின்றனர் மன்னார்குடி உறவினர்கள். காங்கிரசுடன் கூட்டணிக்கான வாய்ப்பு இருந்தும் அதனை தினகரன் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் இதேபோல் அதிமுகவிற்கு எதிராகவோ அல்லது திமுகவிற்கு எதிராக வலுவான ஒரு கூட்டணி அமைக்காமல் வாக்குகளைப் பிரிப்பதற்கும் மட்டுமே தினகரன் தேர்தல் வேலை பார்த்து விட்டதாக சசிகலாவிற்கு ஒரு சந்தேகம் இருந்தது. 

மேலும் தேர்தல் செலவுக்கு என்று தன்னிடம் இருந்து பெற்ற தொகையில் கணிசமான தொகையை செலவு செய்யாமல் வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் தினகரனை கூட ஒதுக்கி வைத்து விட்டார் என்றும் சசிகலாவிற்கு ஏமாற்றம் இருக்கிறது. இதனால்தான் தேர்தல் முடிந்த கையோடு சசிகலாவை சென்ற சந்திக்காமல் அவரை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டியுள்ளார் தினகரன். அதாவது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றால் அது தினகரன் தான் என்கின்ற ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி விட்டது என்ற நிலையில் இனி சசிகலா தயவு தேவை இல்லை என்கிற முடிவிற்கு தினகரன் வந்து விட்டதாக கூறுகிறார்கள். 

இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்னரே யூகித்த சசிகலா தினகரனை தேர்தலுக்குப் பின்னர் அல்லது தேர்தல் முடிந்த பிறகு ஓரம் கட்டி விடலாம் என்கிற திட்டத்தில் இருந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தன்னுடைய அரசியல் வாழ்விற்கு சிக்கல் ஏற்படும் என்று கருதி சசிகலாவை அதிரடியாக ஒதுக்கி வைத்துள்ளார் தினகரன். 

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் வரிசையில் தினகரனும் சசிகலாவின் முதுகில் குத்திவிட்டார் என்று கூறுகின்றனர் மன்னார்குடி உறவுகள். விரைவில் சசிகலாவை பெங்களூர் சிறையில் சென்று சந்திக்க மன்னார்குடி உறவுகள் தயாராகி வருகின்றனர். அந்த சந்திப்பிற்கு பிறகு தினகரனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.