அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  அமமுக என்று புதிய இயக்கத்தை ஆரம்பித்தது முதல் ஓய்வில்லாமல் கட்சிப் பணியில் தீவிரம் காட்டி வருபவர் டி.டி.வி தினகரன். தற்போதும் கூட தினகரன் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மக்கள் சந்திப்பு பயணத்தில் தான் உள்ளார். கொங்கு மண்டலத்தில் நிர்வாகிகள் சந்திப்பை முடித்துவிட்டு தற்போது வட மாவட்டத்திற்கு வந்துள்ளார் டி.டி.வி.   சில நாட்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டத்திற்கு டி.டி.வி சென்று இருந்தார். அப்போதே தினகரனுக்கு நீலகிரி கிளைமேட் ஒப்புக் கொள்ளவில்லை. இருந்தாலும் வந்த வேலையை முடிக்க வேண்டும் என்பதற்காக நிர்வாகிகள் சந்திப்பு, தொண்டர்கள் சந்திப்பு மக்கள் சந்திப்பு என அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டே தினகரன் உதகையில் இருந்து கீழே இறங்கினார்.உடல் ஏற்காத கிளைமேட்டில் ரொம்ப சிரமப்பட்டு இருந்த காரணத்தினால் டி.டி.வி தினகரன் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் பின்னர் அவருக்கு கடுமையான இருமலும் உருவானது. மருத்துவரிடம் சென்று பார்த்துவிட்டு ஓய்வெடுக்கலாம் என்று உதவியாளர்கள் கூறியதை கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு சேலம் பசுமை வழிச்சலை திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த திருவண்ணாமலை சென்றுவிட்டார் டி.டி.வி.  அங்கு சென்று மருத்துவர்களை பார்த்தும், தினகரனுக்கு உடல் நிலை முழுவதுமாக சரியாகவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மிகவும் சோர்வாக காணப்பட்ட நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது மிகவும் சிரமப்பட்டே பதில் அளித்துக் கொண்டிருந்தார். எனவே திருவண்ணமாலை மற்றும் கோவை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பி சிறிது நாட்கள் ஓய்வெடுக்க தினகரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தினகரன் உறவினர்களும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ரொம்ப சிரமப்பட வேண்டாம் என்று அவரை கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு புத்துணர்வுடன் அரசியல் பணிகளை தொடங்கலாம் அதுவரை வீட்டிற்கு வாருங்கள் என்று குடும்பத்தார் அழைக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை முடித்துவிட்டே சென்னை திரும்ப முடியும், தனக்கு சிறிய காய்ச்சல் தான் என்று தினகரன் கூறி வருகிறார்.