ttv dinakaran invites district volunteers to admk office
ஜெயலலிதா மறைவுக்கு பின்ன சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வந்தது. பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் சிறையிலும், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் திகார் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, சசிகலா தலைமையில் செயல்பட்டு வந்த அணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட தொடங்கியது. இதற்கிடையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக இரட்டை இலையை கைப்பற்றுவதற்காக இரு அணிகளும் கடுமையாக போட்டி போட்டு கொண்டு இருக்கின்றன.
இதை தொடர்ந்து சின்னத்தை கைப்பற்றுவதற்கு இரு அணிகளும் இணைந்தால், நிரந்தர தீர்வு ஏற்படும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் சசிகலா, தினகரனை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து நீக்கினால் இரு அணிகளும் இணையும் என ஓ.பி.எஸ். அணியினர் நிபந்தனை விதித்தனர்.

அதன்படி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கான ஆவணங்களில் அதை குறிப்பிடவில்லை என ஓ.பி.எஸ். அணியினர் கூறி வந்தனர்.
ஆனாலும், இரு அணிகள் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடக்கவில்லை. பின்னர், இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியமே இல்லை என ஓ.பி.எஸ். அணியினர் பகிரங்கமாக தெரிவித்தனர்.
இதையொட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த டிடிவி.தினகரன், கட்சியை இனி நானே வழி நடத்துவேன் என அறிவித்தார்.

மேலும், இரு அணிகளும் இணைவதாக கூறியதால், கட்சியில் இருந்து நான் விலகி இருந்தேன். ஆனால், இதுவரை அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால், இனி கட்சியை நானும், ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமியும் வழி நடத்துவோம் என கூறினார்.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 5ம் தேதி அனைத்து மாவட்ட நிர்வாகிகளை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்திக்க உள்ளதாக டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் அமைச்சர் வேலுமணி, ஓ.பன்னீர்செல்வம் எங்களது சகோதரர் என கூறினார். அதேபோல் திவாகரன், ஓபிஎஸ் எங்களது பங்காளி என தெரிவித்தார். இதனால், அதிமுகவில் பிரிந்துள்ள 3 அணிகளும், ஒரே அணியாக இணையும் என டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே டிடிவி.தினகரனுக்கு 37 எம்எல்ஏக்களும், 6 எம்பிக்களும் ஆதரவு தெரிவத்து வருகின்றனர். அதிமுகவின் 50 மாவட்ட செயலாளர்களில், 25 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும், அவர்களது ஆதரவாளர்களும் இதில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

தற்போது, அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிச்சாமி அணியினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமைச்சர்கள் கூட்டம், நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என அனைத்து நிகழ்வுகளையும் எடப்பாடி பழனிச்சாமி அங்கு நடத்தி வருகிறார்.
இந்தவேளையில் டிடிவி.தினகரன் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
