ttv dinakaran force edappadi to dismiss ministers

அமைச்சர்கள் சிலரை நீக்கிவிட்டு, தமது ஆதரவாளர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடிக்கு, தினகரன் நிரபந்தம் கொடுத்துள்ளார். அவ்வாறு செய்ய தவறினால், ஆட்சி கவிழ்க்கப்படும் என்றும் எடப்பாடிக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தை சேர்ந்த அனைவரையும், அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவித்த அமைச்சர்கள், தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலா படங்கள் மற்றும் பேனர்களை அகற்றினர். அத்துடன், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக, கூவத்தூரில் எம்.எல்.ஏ க்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் முதல்வர் எடப்பாடி, இதுவரை நிறைவேற்ற வில்லை.

அமைச்சர்கள் அனைவரும் எம்.எல்.ஏ க்களுக்கோ, மாவட்ட செயலாளர்களுக்கோ எதுவும் கொடுக்காமல், தாங்களே எடுத்து கொள்கின்றனர் என்று முதல்வரை சந்தித்து எம்.எல்.ஏக்கள் முறையிட்டனர்.

இந்நிலையில், ஜாமினில் வெளிவந்த தினகரனை சந்தித்த அவரது ஆதரவு எம்.எல்.ஏ க்கள், சசிகலாவுக்கு எதிராக செயல்பட்ட அமைச்சர்களை நீக்கிவிட்டு, தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சில அமைச்சர்களை நீக்கிவிட்டு, தமது ஆதரவாளர்கள் சிலரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடிக்கு, தினகரன் நிர்பந்தம் கொடுத்துள்ளார்.

அப்படி செய்யவில்லை என்றால், சட்ட சபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கும்போது, வெட்டு தீர்மானம் கொண்டு வந்து ஆட்சி கவிழ்க்கப்படும் என்று எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல்வராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும், அனைவரும் கட்சியின் உறுப்பினர்களே. ஆகவே, ஆட்சியை விட கட்சியே முக்கியம் என்றும் தினகரன் கூறி வருகிறார். தற்போது, எடப்பாடிக்கு ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏ க்களில், தினகரன் ஆதரவாளர்கள், தங்கள் ஆதரவை விலக்கி கொண்டால், ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகும்.

அதே சமயம், எடப்பாடி மற்றும் அமைச்சர்களுக்கு ஆதரவாகவும் எம்.எல்.ஏ க்கள் பலர் இருப்பதால், தினகரன் தன்னிச்சையாக ஆட்சி அமைக்கவும் முடியாது.

இந்த சூழலில், தற்போது, சசிகலாவை சந்திக்க பெங்களூரு புறப்பட்டிருக்கும் தினகரன், அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறார்? என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதேபோல், தினகரனின் நிர்பந்தத்தை முதல்வர் எடப்பாடி ஏற்பாரா? அல்லது எதிர்த்து செயல்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எப்படி பார்த்தாலும், தினகரனுக்கு, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கும் இடையே, ஒரு நெருக்கமான புரிதல் இல்லை என்பது மட்டும் உண்மை.