வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மூன்று பக்க அறிக்கையை தினகரன் வெளியிட்டிருக்கிறார். அதில் தேர்தல் ஆணையத்தில் சின்னம் பெறுவதில் தொடங்கி கட்சிக்கு ஏற்பட்ட சோதனைகள், சங்கடங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். வேலூர் தொகுதியில் ஏன் போடியிடவில்லை என்பது குறித்தும் விளக்கியுள்ளார். “அமமுக என்னும் நமது இயக்கத்தை ஓர் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியை வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களிலேயே நாம் ஆரம்பித்தோம். இந்த நேரத்தில் ஏற்கெனவே நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 
மக்களவை பொதுத் தேர்தலில் நாம் ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்த நேரத்தில், ஆட்சி அதிகாரத்தைக் காட்டி மிரட்டி, பதவி ஆசை காட்டி ஆளும் கட்சியும், நமது இயக்கத்தை பலவீனப்படுத்திவிடலாம் என்ற நப்பாசையுடன் எதிர்க்கட்சியும் சேர்ந்து நம்மில் சிலரை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், நமது இயக்கத்திற்கு நிஜமான மக்கள் ஆதரவு இருக்கிறது.
எதிர்காலத்திலும் வலுவான இயக்கமாக, மக்கள் நலன் காக்கும் வகையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ள இயக்கமாக இருக்கப்போகிறது என்ற யதார்த்த உண்மையைப் புரிந்துகொண்டு, ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்த கூட்டத்துக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற தாகத்தோடு, லட்சோப லட்சம் தொண்டர்கள், அம்மாவின் உண்மையான விசுவாசிகள் என்ற அடையாளத்தோடு இந்த இயக்கத்தில் துடிப்போடு தொடர்ந்து பணியாற்றிவரும் நீங்கள், வேலூர் தேர்தல் களத்தையும் சந்திக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.


ஆனால், நமது இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணி ஆகஸ்ட் மாத இறுதிவாக்கில்தான் நிறைவுபெறக்கூடும். அதுவரை நாம் சுயேட்சை என்ற அடையாளத்தோடுதான் தேர்தல் களத்தில் அறியப்படுவோம். அந்த அடிப்படையில் இந்த வேலூர் தொகுதி தேர்தலுக்காக ஒரு சின்னத்தைப் பெற்று, தொடர்ந்து வரவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு தனித்தனிச் சின்னங்களைப் பெற்று நாம் தேர்தலை சந்திப்பதும்; நமது இயக்கத்தை பதிவு செய்யும் பணி நிறைந்து நமக்கென ஒரு நிரந்தர சின்னத்தைப் பெற்று அதன்பிறகு வரும் தேர்தல்களைச் சந்திப்பதும் என பல சின்னங்களில் போட்டியிடுவது மக்களிடம் மட்டுமல்ல... நமது தொண்டர்கள் மத்தியிலும் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.


இந்த யதார்த்த சூழலை மனதில்கொண்டு, நமது இயக்கத்தின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து, வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறோம். நீங்களும் அதை உணர்ந்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 'இந்த முடிவு பயத்தின் காரணமாக எடுக்கப்பட்டது... தேர்தல் களத்தைக் கண்டு அமமுக பயப்படுகிறது...' என்றெல்லாம் நமது எதிரிகள் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்யக்கூடும். அவற்றையெல்லாம் புறந்தள்ளுங்கள்.
நமது கழகத்தை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்து, நமக்கென ஒரு நிரந்தர சின்னம் பெறும் பணிகளை கழகம் முன்னெடுக்கும் அதே நேரத்தில், நமது கழகத்தை வலுப்படுத்தும் வகையில் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நமது இயக்கத்துக்கான நிரந்தரமான புதிய அடையாளத்தோடு மக்களைச் சந்திப்போம்... வெற்றிகளை ஈட்டுவோம்... தமிழகத்தை இந்த துரோகக் கூட்டத்திடம் இருந்து மீட்போம்" என தினகரன் தெரிவித்துள்ளார்.